மலையகத்தில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் விரைவில் ஆரம்பம்!

ஒரு வீட்டுக்கு சுமார் 28 இலட்சம் ரூபாய் தேவைப்படுகின்றது. இது தொடர்பில் இந்திய அரசுடன் பேச்சு நடத்தி, அதற்கான அனுமதியையும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பெற்றுக்கொடுத்துள்ளார்.

டிசம்பர் 16, 2023 - 02:18
டிசம்பர் 16, 2023 - 02:19
மலையகத்தில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் விரைவில் ஆரம்பம்!

இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் நிர்மாணிக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

இதற்கான இணக்கப்பாடு, அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (15) நடைபெற்ற சந்திப்பில் எட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய 10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் ஆரம்பக்கட்டமாக ஆயிரத்து, 300 வீடுகளை அமைப்பதற்கான பணி இன்னும் ஓரிரு வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்திய அரசின் உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டு திட்டம் தொடர்பில் அனைத்து பங்குதாரர்களுக்கும் இடையிலான சந்திப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில், கொழும்பு, பத்தரமுல்லவில் உள்ள நீர்வழங்கல் அமைச்சில் இன்று நடைபெற்றது.

வீடுகளை நிர்மாணிப்பதற்கான இடங்களை அடையாளம் காணும் பணி ஏற்கெனவே நிறைவுபெற்றுள்ளது.  காணி உரிமையை வழங்குவதற்கு பெருந்தோட்ட கம்பனி தரப்பிலும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, 10 பேர்ச்சஸ் காணி உரிமையுடன் - சகல உட்கட்டமைப்பு வசதிகளையும் உள்ளடக்கிய வகையில் குறித்த வீட்டு திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தந்திருந்தபோது மலையக மக்களுக்கான 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. அப்போது ஒரு வீட்டுக்கு சுமார் 10 இலட்சம் ரூபாய் மதிப்பிடப்பட்டது.

எனினும், கொரோனா பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் வீட்டு திட்ட பணிகள் தாமதித்தன.

இந்நிலையில், தற்போதைய நிலைமையில் ஒரு வீட்டுக்கு சுமார் 28 இலட்சம் ரூபாய் தேவைப்படுகின்றது. இது தொடர்பில் இந்திய அரசுடன் பேச்சு நடத்தி, அதற்கான அனுமதியையும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பெற்றுக்கொடுத்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!