காத்திருந்து காத்திருந்து.. ஆஷஸை பறிகொடுத்த இங்கிலாந்து.. கொண்டாட்டத்தில் ஆஸ்திரேலியா!

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் போடப்பட்ட போது, பந்துவீச்சை தேர்வு செய்தார். ஒல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் பந்துவீச்சை தேர்வு செய்த அணி வென்றதால வரலாறே இல்லை. அந்த வரலாற்றை மாற்ற விரும்புவதாக தெரிவித்தார்.
பென் ஸ்டோக்ஸ் சொல்லி வார்த்தைக்கு ஏற்பவே வரலாற்றை மாற்ற இங்கிலாந்து அணிக்கு சரியான சந்தர்ப்பம் கிடைத்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 317 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன் பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி பேஸ் பால் திட்டத்தை கையில் எடுத்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
3வது நாளிற்குள் இங்கிலாந்து அணி 592 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணியின் கிராலி 192 ரன்களும், பேர்ஸ்டோவ் 99 ரன்களும், ஜோ ரூட் 84 ரன்களும் விளாசினர். இதன் மூலம் இங்கிலாந்து அணி 275 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு இன்னிங்ஸ் தோல்வி உறுதி என்று பார்க்கப்பட்டது. இதனால் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தின் வரலாற்றை இங்கிலாந்து மாற்றும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 113 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனால் 4வது நாளில் இங்கிலாந்து அணி வெற்றிபெறும் என்று பார்க்கப்பட்டது. ஆனால் 4வது நாளின் முதல் செஷன் மொத்தமாக மழையால் ரத்தானது.
பின்னர் களமிறங்கிய லபுஷேன் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தவிர்க்க வாய்ப்பிருப்பதாக பார்க்கப்பட்டது.
ஆஷஸ் 4வது டெஸ்ட்.. எங்கேயோ மச்சம் இருக்கு.. தோற்க வேண்டிய போட்டி இப்படி ஆச்சே?
லபுஷேன் 111 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 214 ரன்கள் சேர்த்திருந்தது. இதன் பின் மீண்டும் மழை பெய்ததால் 4ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் 5ஆம் நாள் ஆட்டம் நடக்குமா என்று பார்க்கப்பட்ட நிலையில், மொத்தமாக மழை பெய்து இங்கிலாந்தின் கனவை சுக்கு நூறாக்கியது. இதனால் ஆட்டம் டிராவில் முடிவதாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலிய அணி தக்க வைத்துக் கொண்டுள்ளது. 4 போட்டிகளின் முடிவில் 2-1 என்ற ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது. அதேபோல் 5வது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய வாய்ப்பிருப்பதால், 5வது போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.