வைத்தியசாலையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட யுவதி
பாதிக்கப்பட்ட யுவதி சிகிச்சை பெற்று வரும் போது குறித்த வைத்தியர் துஷ்பிரயோகம் செய்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வந்த யுவதியொருவர் அங்குள்ள வைத்தியரால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக முறைப்பாடு கிடைத்துள்ளது.
பாதிக்கப்பட்ட யுவதி சிகிச்சை பெற்று வரும் போது குறித்த வைத்தியர் துஷ்பிரயோகம் செய்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சம்மில் விஜேசிங்கவிடம் கேட்ட போது, குற்றம் சுமத்தப்பட்ட வைத்தியர் தமது சங்கத்தின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டதாக தெரிவித்தார்.
அத்துடன், இச்சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, சட்டத்தை உடனடியாக அமல்படுத்தி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
“இது தொடர்பில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் இருந்து அறிக்கை பெறப்பட்டது. அதில் ஒரு விடயம் தெளிவுபடுத்தப்பட்டது, குறித்த வைத்தியர் இதற்கு முன்னர் அரச வைத்திய அதிகாரிகளின் யாப்பினை மீறியுள்ளார்.
அத்துடன், ஒழுக்கமின்மைக்காக 2021 ஆம் ஆண்டு சங்கத்தின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த சம்பவத்தை நாம் புறக்கணிக்க முடியாது. இது தொடர்பாக நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்.
குற்றவாளியை எந்த வகையிலும் பாதுகாக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தயாராக இல்லை. விசாரணைக்கு அதிகபட்ச ஆதரவை வழங்கத் தயார்'' என்றார்.