தொடர் மழையினால் மலையகத்தில் வான் கதவுகள் திறப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மண்சரிவு அபாயமிக்க பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.

டிசம்பர் 4, 2023 - 23:38
தொடர் மழையினால் மலையகத்தில் வான் கதவுகள் திறப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சீரற்ற காலநிலையால் மத்திய மலைநாட்டில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அதிக மழை காரணமாக காசல்ரி கெனியோன், மவுசாக்கலை, லக்ஸபான, நவலக்ஸபான, பொல்பிட்டிய, மேல்கொத்மலை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் உயர்ந்து வான் பாயும் அளவினை எட்டியுள்ளது.

நேற்று (03) மாலை முதல் நோட்டன் பிரிஜ் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தில் உள்ள அனைத்து வான் கதவுகளிலும் நீர் வான் பாய்ந்து வருகின்றது.

தொடந்து பெய்து வரும் மழை காரணமாக ஏனைய நீர்த்தேக்கங்களிலும் நீர் மட்டம் உயர்ந்துள்ளதனால் எந்த வேளையிலும் வான் கதவுகள் தன்னிச்சையாக திறக்கப்படலாம் எனவும் அணைக்கட்டுக்கு மேலாக வான் பாயலாம் எனவும் நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

எனவே நீர்த்தேக்கங்களுக்கு கீழ் தாழ் நிலப் பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மண்சரிவு அபாயமிக்க பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.

இதேவேளை ஹட்டன் - கொழும்பு மற்றும் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியிலும் ஹட்டன் - கண்டி பிரதான வீதியிலும் பல இடங்களில் மண் திட்டுக்கள் சரிந்து விழுந்துள்ளன.

இவ்வாறான வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக பயணிக்குமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!