மன்னார் முதல் மாத்தளை வரை “மலையகம் 200” எழுச்சிப் பயணம்

மலையக பெருந்தோட்டங்களில் தொழில்புரிவதற்காக தென்னிந்தியாவில் இருந்து மலையக மக்கள் அழைத்து வரப்பட்டு 200 வருங்கள் பூர்த்தியாகியுள்ளது.

ஜுலை 19, 2023 - 17:39
ஜுலை 20, 2023 - 00:15
மன்னார் முதல் மாத்தளை வரை “மலையகம் 200” எழுச்சிப் பயணம்

Colombo (News21) மலையக பெருந்தோட்டங்களில் தொழில்புரிவதற்காக தென்னிந்தியாவில் இருந்து மலையக மக்கள் அழைத்து வரப்பட்டு 200 வருங்கள் பூர்த்தியாகியுள்ளது.

மன்னாரில் தரையிறங்கிய மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்து மாத்தளை வரை கால்நடையாக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர்.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆபத்தான பயணத்தை நினைவு கூறும் வகையில் மன்னாரில் இருந்து மாத்தளை வரையான பாதயாத்திரையொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 ஜுலை 29ஆம் திகதி மன்னாரில் ஆரம்பிக்கும் இந்த பயணம்  ஆகஸ்ட் 12ஆம் திகதி மாத்தளையில் நிறைவு பெறவுள்ளது.

மாண்புமிகு மலையகத்திற்கான கூட்டிணைவு, தேசிய கிறிஸ்தவ பேரவை, சிவில் சமூக அமைப்புகள் மற்றும் மலையக சமூகத்துடன் பணிபுரியும் தனிநபர்கள் அடங்கிய ஒரு குழுவினரால்,  இந்த நடைபவனியானது  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மலையக தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நடைபவனி மற்றும் அதனுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலந்துரையாடல்களில் பங்கேற்குமாறு அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தில் இன்று (19) முற்பகல் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயங்கள் அறிவிக்கப்பட்டன.

“இந்தியாவில் இருந்து தமிழர்கள் இலங்கைக்கு தோட்டங்களில் வேலை செய்வதற்காக அழைத்து வரப்பட்டு 200 ஆண்டுகள் ஆகின்றன.  அன்றிலிருந்து இச் சமூகம் நாட்டிற்கு அனைத்துத் துறைகளிலும், குறிப்பாக பொருளாதாரத்தில் பெரும் பங்களிப்பை அளித்துள்ளது.  

இலங்கையில் அவர்களின் இருப்பு தொடர்ச்சியான போராட்டமாகவே இருந்து வருகிறது.

 #மலையகம்200 இன் ஒட்டுமொத்த கருப்பொருளுக்கு இணங்க, தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரையிலான நடைப்பயணத்தை நாங்கள் ஒழுங்குபடுத்தி - இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் முதன்முதலில் கொண்டு வரப்பட்டு, காடுகளின் ஊடாக கோப்பி தோட்டங்களுக்கு சென்றபோது அவர்கள் சென்ற பாதையை மீட்டுப் பார்க்கவிருக்கிறோம்.

நடைப்பயணத்தின் நோக்கம் பிரதிபலிப்பு மற்றும் இணைப்பாகும்.  இது எதிர்காலத்தைப் பற்றியது.  மலையக சமூகம் இலங்கையின் முழுமையான மற்றும் சமமான குடிமக்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பற்றி,  நமது வரலாறு, போராட்டங்கள் மற்றும் அபிலாஷைகள் பற்றி மற்ற சமூகத்தினருடன் உரையாடுவதற்கான வாய்ப்பாகவும் இந்த நாடு முழுவதுமான நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள், ‘மாண்புமிகு மலையக மக்கள்’ என்ற தொனிபொருளின் கீழ் 15 நாட்களில் 252 கிலோமீட்டர்கள் தூரம் நடக்கத் திட்டமிட்டுள்ளனர்.  வழியில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன” என இதன் போது அறிவிக்கப்பட்டது. (News21.lk)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!