விராட் கோலி காயம் – இறுதிப்போட்டியில் பங்கேற்பாரா? என்ன செய்ய போகிறது இந்திய அணி?
இந்திய அணியை நியூசிலாந்தால் மட்டுமே வீழ்த்த முடியும் எனவும் இந்திய அணி மிகுந்த எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும் எனவும் ரவி சாஸ்திரி தெரிவித்திருக்கிறார்.

சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டி துபாய் இண்டர்நேஷனல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருக்கும் நிலையில் இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்திய அணி துபையில் அனைத்து போட்டிகளிலும் விளையாடியுள்ளதால் இன்று நடைபெறும் போட்டி இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் இந்திய அணி தரப்பில் இந்த விமர்சனத்தை மறுத்துள்ளனர்.
ஒவ்வொரு முறையும் பிட்ச் மாற்றப்படுவதால் இந்திய வீரர்கள் ஒவ்வொரு முறையும் புதிதாக தயாராவதாக கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார். லீக் போட்டிகள், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டி என அனைத்திலும் வென்று இந்திய அணி நல்ல ஃபார்மில் இருக்கின்றனர்.
இந்திய அணியை நியூசிலாந்தால் மட்டுமே வீழ்த்த முடியும் எனவும் இந்திய அணி மிகுந்த எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும் எனவும் ரவி சாஸ்திரி தெரிவித்திருக்கிறார்.
குறிப்பாக இந்திய அணியின் வீராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 84 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விராட் கோலி பயிற்சியின் போது முழங்காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது.
உடனடியாக பயிற்சியை நிறுத்திய கோலி சிகிச்சை எடுத்துக்கொண்டார். அதன் பிறகு அவர் பயிற்சியில் பங்கேற்காததால் அவர் நாளை நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்த நிலையில் பயிற்சியாளர்கள் தரப்பில் கோலிக்கு பெரிதான காயம் இல்லை எனவும் அவர் இறுதிப் போட்டியில் நிச்சயம் பங்கேற்பார் என தெரிவிக்கின்றனர். இதே போல நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் தோள் பட்டையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவரும் இறுதிப்போட்டியில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார் என்பது குறிப்பிட்தக்கது. இந்த நிலையில் அவர் பங்கேற்கவில்லை என்றால் அது நியூசிலாந்து அணிக்கு பாதிப்பாக அமையும் .
துபாயில் மழை காரணமாக போட்டி தடைபடும் பட்சத்தில் போட்டி ரிசர்வ் நாளில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. மார்ச் 9 போட்டி முடிவடையவில்லை என்றால் போட்டி மார்ச் 10 ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது.
நான்கு போட்டிகளில் 217 ரன்கள் எடுத்து இந்தத் தொடரில் இந்தியாவுக்கு அதிக ரன் எடுத்த வீரராக விராட் கோலி நல்ல பார்மில் இருக்கிறார். அவர் பங்கேற்கவில்லை என்றால் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது