சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி? இதோ விவரம்!
மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மாபெரும் சாதனையை விராட் கோலி முறியடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிக்கு இடையில் பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போது இரண்டாவது இன்னிங்ஸில் நட்சத்திர வீரரான விராட் கோலி சதம் அடித்திருந்தார்.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டு போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 3 இன்னிங்ஸ்களிலும் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்து வெளியேறினார்.
இந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி பாக்ஸிங் டே போட்டியாக மெல்போர்ன் நகரில் நடைபெற உள்ளது. எனவே, இந்த போட்டியில் மீண்டும் விராட் கோலி சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விராட் கோலி தற்போது தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மாபெரும் சாதனையை முறியடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மெல்போர்ன் மைதானத்தில் 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள விராட் கோலி ஒரு சதம் உட்பட 316 ரன்களை குவித்து உள்ளதுடன், மெல்போர்ன் மைதானத்தில் அதிக ரன்கள் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை பெற்று உள்ளார்.
இந்திய அணிக்காக மெல்போர்ன் மைதானத்தில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர் ஒரு சதம் மற்றும் மூன்று அரைசதம் என 449 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளதுடன், மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு சதங்கள் உட்பட 369 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் ரகானே உள்ளார்.
முன்னதாக, கடந்த 2014 ஆம் ஆண்டு மெல்போர்ன் நகரில் நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 169 ரன்கள் குவித்து இருந்தார்.
இந்த நிலையில், நான்காவது போட்டியில் விராட் கோலி மேலும் 134 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் ரகானே மற்றும் சச்சின் ஆகியோரை பின்னுக்கு தள்ளி மெல்போர்ன் மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராகும் வாய்ப்பு உள்ளது.