இலங்கை டி20 அணித் தலைவராக வனிந்து ஹசரங்க? வெளியான தகவல்!

சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவை தலைவராக நியமிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

டிசம்பர் 16, 2023 - 19:35
இலங்கை டி20 அணித் தலைவராக வனிந்து ஹசரங்க? வெளியான தகவல்!

இலங்கை டி20 கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவியில் மாற்றம் செய்ய உபுல் தரங்க தலைமையிலான புதிய தெரிவுக்குழு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவை தலைவராக நியமிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

2019 இல் நியூசிலாந்துக்கு எதிராக முதலாவது இருபது20 போட்டியில் விளையாட ஆரம்பித்த வனிந்து ஹசரங்க தற்போது வரை 58 போட்டிகளில் 91  விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அத்துடன், டி20  பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் கடந்த காலத்தில் முதலிடத்தில் இருந்த வனிந்து, தற்போது தரவரிசையில் 03ஆவது இடத்தில் உள்ளார்.

2021 ஆம் ஆண்டு இலங்கையின் ODI மற்றும் T20 அணித்தலைவராக தசுன் ஷானக நியமிக்கப்பட்டதுடன், கடந்த உலகக் கோப்பை போட்டிகளுக்கு நடுவே காயம் காரணமாக, அவரை நீக்கிவிட்டு தற்காலிகமாக குசல் மெண்டிஸ் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார்.

எவ்வாறாயினும்,  ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை அணித் தலைவர் பதவி தொடர்பில் புதிய தெரிவுக்குழு இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், டெஸ்ட் அணித் தலைவர் பதவியை திமுத் கருணாரத்னவுக்கே வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன்,  உபுல் தரங்க தலைமையிலான தெரிவுக்குழு எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் கூடவுள்ளது.

இதன்போது, எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான இலங்கை அணி குறித்து முக்கிய தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!