பூஸா சிறைச்சாலை அதிகாரிக்கு பாதாள உலகக் குழுத் தலைவரின் எச்சரிக்கை!
சிறைச்சாலை தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள கைதிகளை பார்வையிடும் விசேட சந்தர்ப்பம், எதிர்வரும் 16ஆம் திகதி வழங்கப்படும் என சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பூஸா சிறைச்சாலையின் சிரேஷ்ட அதிகாரியை, பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ அச்சுறுத்தியுள்ளமை தொடர்பாக குறித்த அதிகாரி பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளார்.
பூஸா சிறைச்சாலை கைதிகளின் கையடக்கத் தொலைபேசிகளை கைப்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றே பாதாள உலகக் குழுத் தலைவர் அந்த அதிகாரியை அச்சுறுத்தியுள்ளார்.
நேற்று (12) அதிகாலை 70 சிறைச்சாலை அதிகாரிகள் இணைந்து பூஸா சிறைச்சாலையில் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது, சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சிம் அட்டைகள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூண்டுகளில் இருந்தே இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்தே, பூஸா சிறைச்சாலையின் சிரேஷ்ட அதிகாரிக்கு மேற்படி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறைச்சாலை தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள கைதிகளை பார்வையிடும் விசேட சந்தர்ப்பம், எதிர்வரும் 16ஆம் திகதி வழங்கப்படும் என சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.