யாழில் இரு பஸ்கள் மோதி விபத்து; நால்வர் காயம்; சாரதிகள் கைது
பயணி ஒருவரை ஏற்றுவதற்காக இலங்கை போக்குவரத்து சபை பஸ் வீதியில் நிறுத்தப்பட்ட நிலையில், பின்னால் வேகமாக வந்த தனியார் பஸ் மோதியமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை, குறிகட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்ஸும் தனியார் பஸ்ஸும் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து, இன்று (23) காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பஸ்களின் சாரதிகள் இருவரும் ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயணி ஒருவரை ஏற்றுவதற்காக இலங்கை போக்குவரத்து சபை பஸ் வீதியில் நிறுத்தப்பட்ட நிலையில், பின்னால் வேகமாக வந்த தனியார் பஸ் மோதியமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது இரண்டு பஸ்களும் பலத்த சேதத்திற்கு உள்ளானதுடன், காயமடைந்தவர்கள் அம்பூலன்ஸ் மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
விபத்து தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.