பிரித்தானிய குடியேற்ற விதிகளில் அதிரடி திருப்பம்: அகதிகளுக்கு ஆங்கிலப் புலமை அவசியமில்லை?
பிரித்தானியாவில் குடியேற்ற விதிமுறைகள் தொடர்பாக வெளியான புதிய விளக்கம், அரசியல் வட்டாரங்களில் கடும் விவாதத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் குடியேற்ற விதிமுறைகள் தொடர்பாக வெளியான புதிய விளக்கம், அரசியல் வட்டாரங்களில் கடும் விவாதத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. லேபர் அரசின் கீழ் உள்துறைச் செயலராக பொறுப்பேற்றுள்ள Shabana Mahmood, குடியமர்வு உரிமைகளுக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார். அதன்படி, குற்றப் பின்னணி இல்லாதிருத்தல், ஆங்கிலப் புலமை கொண்டிருத்தல் மற்றும் கடன் இல்லாதிருத்தல் போன்ற தகுதிகள் அவசியம் என கூறப்பட்டது.
இந்த சூழலில், எல்லை பாதுகாப்பு அமைச்சரான Alex Norris வெளியிட்ட விளக்கம் அரசியல்வாதிகளை கொந்தளிக்கச் செய்துள்ளது. ஷபானா மஹ்மூத் அறிவித்த நிபந்தனைகள் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு பொருந்தாது என அவர் தெளிவுபடுத்தினார். அதாவது, அகதிகளாக விண்ணப்பிப்பவர்களுக்கு ஆங்கிலப் புலமை கட்டாய நிபந்தனையல்ல என அவர் கூறினார்.
உள்துறை அலுவலக வட்டாரங்கள், காலவரையறையின்றி பிரித்தானியாவில் தங்குவதற்காக விண்ணப்பிக்கும் அகதிகள், குறிப்பிட்ட கட்டத்தில் ஆங்கில மொழித் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும் என வலியுறுத்தினாலும், நோரிஸ் அதற்கு மாறான சட்டப்பூர்வ காரணங்களை முன்வைத்தார். அகதிகள் நிலை தொடர்பான சர்வதேச ஒப்பந்தங்களுக்கும், மனித உரிமைகள் தொடர்பான European Convention on Human Rights உடன்படிக்கைக்கும் கையொப்பமிட்டுள்ள நாடு என்பதால், பிரித்தானியா புகலிடம் கோரி வரும் அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலிக்க சட்டபூர்வ கடமை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், ஒருவரை பிரித்தானியாவிலிருந்து அகற்றும் எந்த நிலையிலும், அவர்களின் மனித உரிமைகள் கட்டாயமாக கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும், அந்த நபர் ஆங்கிலம் பேசும் திறன் உடையவரா இல்லையா என்பது இதற்குத் தடையாக இருக்க முடியாது என்றும் நோரிஸ் கூறினார். தங்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படும் போது, அங்கு துன்புறுத்தல் அல்லது கடுமையான ஆபத்து ஏற்படும் சூழ்நிலையில், அந்த நபரை அந்நாட்டிற்கோ அல்லது வேறு எந்த நாட்டிற்கும் அனுப்பக்கூடாது என்பதே இந்த விதிகளின் அடிப்படை நோக்கம் என்றும் அவர் விளக்கினார்.
இதன் விளைவாக, “அகதிகளுக்கு ஆங்கிலப் புலமை அவசியம் இல்லை” என்ற நோரிஸின் கூற்று, ஆளுங்கட்சியினரிடையே கடும் எதிர்ப்பையும் அரசியல் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.



