கடைசி உலகக்கோப்பை.. இப்படி நடக்கும்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.. ரவிச்சந்திரன் அஸ்வின்!
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவேன் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்று இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவேன் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்று இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 5 நாட்களே உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்று வருகின்றன.
இன்றைய பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். ஆனால் டாஸ் போடப்பட்ட பின் மழை பெய்து வருவதால், ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நேர்காணல் எடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக அஸ்வின் தான் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் பேசுபொருளாக உள்ளார்.
கடைசி நேரத்தில் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்ததோடு, பேட்டிங் பயிற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கவுகாத்தியில் நடைபெற்ற வலைபயிற்சியில் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களை ஆட முயன்றது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தினேஷ் கார்த்திக்கிடம் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், உண்மையை சொல்ல வேண்டுமென்றால், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவேன் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
எப்போதும் கிரிக்கெட்டை ரசித்து விளையாட வேண்டும் என்பதே கடந்த 5 ஆண்டுகளில் எனது தாரக மந்திரமாக உள்ளது. உலகக்கோப்பை தொடரையும் ரசித்து விளையாட விரும்புகிறேன்.
இந்திய அணியின் மீடியா மேலாளரிடம் என்னை செய்தியாளர்கள் சந்திப்பிற்கு, நேர்காணல் கொடுக்கவோ அழைக்காதீர்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் தினேஷ் கார்த்திக் நேர்காணல் செய்கிறார் என்பது தெரிந்த பின், எனக்கு அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
உலகக்கோப்பை தயாரிப்புகளில் இந்திய வீரர்கள் அனைவரும் தீவிரமாக இருக்கிறோம். அதேபோல் அழுத்தத்தை சமாளிக்கவும், வேரியேஷன்களிலும் கவனம் செலுத்தி வருகிறேன்.
இரு பக்கமும் பந்தை திருப்ப வேண்டும் என்று தீவிரமாக பயிற்சி மேற்கொள்கிறேன். உலகக்கோப்பை தொடரில் அனைத்து வீரர்களுக்கும் அழுத்தம் என்பது உச்சத்தில் இருக்கும். ஆனால் எனக்கு இந்த உலகக்கோப்பையை ரசித்து விளையாட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
எனக்கும் இது தான் இந்தியாவுக்காக எனது கடைசி உலகக்கோப்பை என்று சொல்லிக் கொண்டே இருந்தேன். அதனால் இதனை கொண்டாட்டமாக விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.