மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட இளைஞனின் உடல்! (வீடியோ)

இளைஞனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் கடந்த ஒன்பதாம் திகதி உத்தரவிட்டிருந்தார்.

ஏப்ரல் 23, 2025 - 23:33
ஏப்ரல் 24, 2025 - 00:05
மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட இளைஞனின் உடல்! (வீடியோ)

வெலிக்கடை பொலிஸாரின் காவலில் இருந்தபோது சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்த 26 வயதுடைய நிமேஷ் சத்சர என்ற இளைஞனின் உடல் இன்று(23) காலை பிரேத பரிசோதனைகளுக்காக மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

பதுளை நீதவான் மற்றும் மூன்று பேர் கொண்ட மருத்துவக் குழுவின் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. காலை 9.30 மணிக்கு ஆரம்பமான நடவடிக்கை 11.40 மணிக்கு நிறைவடைந்திருந்தன.

இளைஞனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் கடந்த ஒன்பதாம் திகதி உத்தரவிட்டிருந்தார்.

இளைஞனின் மரணம் தொடர்பாக சட்ட மருத்துவ அதிகாரி நடத்திய பிரேத பரிசோதனை திருப்திகரமாக இல்லாததால், உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த மூன்று பேர் கொண்ட நிபுணர் மருத்துவ குழுவை நியமிக்க உத்தரவிடக் கோரி, பாதிக்கப்பட்ட தரப்பினர் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பான ஆரம்ப விசாரணைகள் கொழும்பு குற்றப்பிரிவால் நடத்தப்பட்ட நிலையில், பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், ஏப்ரல் 04ஆம் திகதி முதல் விசாரணை குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது.

நாவல பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கடந்த 01ஆம் திகதி கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன், பொலிஸ் காவலில் இருந்த போது முல்லேரியாவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து, 02ஆம் திகதி அதிகாலையில், சந்தேகநபரான இளைஞன் இளைஞன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!