முதல் ஒருநாள் போட்டியில் எளிதாக வென்று  அசத்தியது இந்திய அணி

நாக்பூர் மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

பெப்ரவரி 7, 2025 - 12:19
முதல் ஒருநாள் போட்டியில் எளிதாக வென்று  அசத்தியது இந்திய அணி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

நாக்பூர் மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க வீரர்கள் பிலிப் சால்ட் (43 ரன்) மற்றும் டக்கெட் (32 ரன்) நல்ல தொடக்கம் கொடுத்தனர். ஜாஸ் பட்லர் (52 ரன்) மற்றும் ஜேக்கப் பேட்டில் (51 ரன்) அரை சதம் அடித்து அணியை மீட்டனர்.

எனினும், மற்ற வீரர்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் ஹர்ஷித் ராணா மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து, 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (15 ரன்) மற்றும் ரோகித் சர்மா (2 ரன்) விரைவில் ஆட்டமிழந்தனர்.

பின்னர் இணைந்த சுப்மன் கில் – ஷ்ரேயாஸ் இணைந்ததுடன், டி20 போட்டி போன்று ரன்கள் சேர்த்த ஷ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 2 சிக்சர் 9 பவுண்டரியுடன்  59 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த அக்சர் படேலும் சுப்மன் கில்லும் 4 ஆவது விக்கெட்டிற்கு 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அக்சர் படேல் 52 ரன்களில் ஆட்டமிழக்க சுப்மன் கில் 96 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்த, 38.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 251 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒடிசாவின் கட்டாக் நகரில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!