2019 அரையிறுதியில் தோல்வி.. பழிவாங்குமா இந்திய அணி?
இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்த தோல்வி இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தை நொறுக்கியது.

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் 8 போட்டிகளில் 7 வெற்றி, ஒரு தோல்வியுடன் அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியது. அதேபோல் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியிலும் நியூசிலாந்து அணி நெட் ரன் ரேட் மூலமாக முன்னேறியது.
மான்செஸ்டரில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதல் பேட்டிங் செய்தது. இதில் நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டது.
இதனால் ஆட்டம் ரிசர்வ் நாளிற்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து சிறப்பாக ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 239 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 74 ரன்களும், வில்லியம்சன் 67 ரன்களும் விளாசினர்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் டாப் ஆர்டர் மேட் ஹென்ரி வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. தொடக்க வீரர் ரோகித் சர்மா ஒரு ரன்னிலும், போல்ட் பந்தில் விராட் கோலி 1 ரன்னிலும், ஹென்ரி பந்துவீச்சில் கேஎல் ராகுல் ஒரு ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 6 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனால் 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. தொடர்ந்து ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் தேவையில்லாத ஷாட் ஆடி ஆட்டமிழக்க, 92 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.
பின்னர் தோனி - ஜடேஜா இருவரும் சேர்ந்து இந்திய அணியை மீட்டு கொண்டு வந்தனர். இந்திய அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடந்த நிலையில் ஜடேஜா 77 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து தோனி 50 ரன்கள் எடுத்த நிலையில் கப்தில் வீசிய த்ரோவால் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
இறுதியாக இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்த தோல்வி இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தை நொறுக்கியது.
ரோகித் சர்மா, தோனி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் ஓய்வறையிலேயே கண்ணீர் சிந்தினர். இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்கு, இந்திய அணி பதிலடி கொடுக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.