மூன்று தொழிற்சங்கங்கள் போராட்டம்: 10 ரயில் சேவைகள் பாதிப்பு
சம்பள தொகை, பதவி உயர்வுகள் மற்றும் ஆட்சேர்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வினை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ரயில் சாரதிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள் சங்கம, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்கம் ஆகிய மூன்று தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
தமது சங்கத்தின் போராட்டம் இன்றும் தொடர்வதாக லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம். சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
சம்பள தொகை, பதவி உயர்வுகள் மற்றும் ஆட்சேர்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வினை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள இரண்டு நிலையங்களில் இருந்து ரயில் சேவைகள் இடம்பெறாத நிலையில், 10 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள் சங்கமும் தமக்கான சம்பள உயர்வு உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கோரி தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அச்சங்கத்தின் உப தலைவர் நிலதா விஜேசேன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக கிராமிய வீதிகள் மற்றும் பாலங்கள் அபிவிருத்தி நடவடிக்கைகளில் இருந்து நேற்று முதல் விலகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது இவ்வாறு இருக்க பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் 38ஆவது நாளாகவும் தொடர்கிறது.
கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத சம்பள குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ்.பிரியந்த தெரிவித்துள்ளார்.