பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ள மகீஷ் தீக்ஷன
தீக்ஷன உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னர் உடல் நிலை தேறியதாக குறிப்பிடப்பட்டிருந்ததோடு அவர் இலங்கையின் உலகக் கிண்ண அணியில் உள்வாங்கப்பட்டிருந்தார்.

சுமார் ஒரு மாத காலமாக தசை உபாதைக்கு முகம் கொடுத்திருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவரான மகீஷ் தீக்ஷன, பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கிண்ண மோதலில் ஆடுவதற்கு பூரண உடற்தகுதியினைப் பெற்றுள்ளார்.
இலங்கை அணியின் நம்பிக்கைகுரிய சுழல்பந்துவீச்சாளர்களில் ஒருவராக காணப்பட்டிருந்த 23 வயது நிரம்பிய மகீஷ் தீக்ஷன ஆசியக் கிண்ணத் தொடரின் போது உபாதைக்குள்ளாகியிருந்த நிலையில், உலகக் கிண்ணத் தொடரிலும் ஆடுவது சந்தேகமாக இருந்தது.
எனினும் தீக்ஷன உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னர் உடல் நிலை தேறியதாக குறிப்பிடப்பட்டிருந்ததோடு அவர் இலங்கையின் உலகக் கிண்ண அணியில் உள்வாங்கப்பட்டிருந்தார்.
ஆனால், தென்னாபிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில் ஆடும் சந்தர்ப்பம் தீக்ஷனவிற்கு இல்லாமல் போயிருந்தது.
தென்னாபிரிக்காவிற்கு எதிரான குறிப்பிட்ட போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி 102 ஓட்டங்களால் மோசமான தோல்வியினைப் பதிவு செய்திருந்தது.
தற்போது தீக்ஷன பூரண உடற்தகுதியினைப் பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர் இலங்கை குழாத்தில் இணைவார் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
”தீக்ஷன பாகிஸ்தான் போட்டியில் ஆடுவதற்காக பூரண உடற்தகுதியுடன் இருப்பார் என நான் நம்புகின்றேன். உண்மையில் அவர் மருத்துவ ஆலோசனைகளுக்கு ஏற்ப நாம் முதல் போட்டியில் ஆபத்து எச்சரிக்கையினை கருத்திற் கொண்டு களமிறக்கவில்லை. எனினும் இப்போட்டியில் அவர் விளையாடுவார் என்பதனை உறுதிப்படுத்துகின்றேன்.” - என, மகீஷ் தீக்ஷனவின் உடல் நலம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளரான நவீட் நவாஸ் குறிப்பிட்டிருந்தார்.
இதேநேரம் தீக்ஷன அணிக்குள் வரும் சந்தர்ப்பத்தில் இலங்கை அணி வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அதிக சாதக வாய்ப்புக்கள் கொண்ட ஹைதராபாத் மைதானத்தில் இடதுகை சுழல்வீரரான துனித் வெல்லாலகேவிற்கு ஓய்வு வழங்கப்படலாம்.
துனித்திற்கு ஓய்வு வழங்கப்படாவிட்டால், இலங்கை வீரர்கள் இரண்டு முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் இரண்டு முன்னணி சுழல்வீரர்களுடன் விளையாடுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றது.
இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி இன்று மதியம் 2 மணிக்கு ஹைதராபாதில் ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.