மாணவர்கள் மீது மதில் விழுந்த விவகாரம்... விசாரணைக்கு குழு நியமனம்
இந்த சம்பவத்தில் காயமடைந்த 05 சிறுவர்கள் தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெல்லம்பிட்டிய, வெஹெரகொட கனிஷ்ட பாடசாலையில் மதில் இடிந்து விழுந்ததில் மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மேல்மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக இதனை தெரிவித்துள்ளதுடன், ஒரு வாரத்துக்குள் விசாரணை அறிக்கையைப் பெற்று குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என, அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேல்மாகாண பிரதம செயலாளர் பிரதீப் யசரத்னவுக்கு பணிப்புரை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு மாணவனின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த 05 சிறுவர்கள் தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, மாணவர்கள் காயமடைந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சு கல்வி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வலய கல்வி அலுவலக அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, குறித்த பாடசாலைக்குச் சென்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஜயவர்தனபுர வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நேற்று முற்பகல் (15) கைகளை கழுவிக் கொண்டிருந்த முதலாம் தரத்தைச் சேர்ந்த 06 மாணவர்கள் மீது பாடசாலையில் தண்ணீர் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்த கொங்கிரீட் மதில் இடிந்து விழுந்தது.
இதனையடுத்து, குறித்த பாடசாலையின் அதிபர் மீது பிரதேச மக்கள் தாக்குதல் நடத்தியதையதாகவும், அதிபரும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. (News21)