ஆசியக் கிண்ண இறுதி போட்டியை பார்வையிட வருவோருக்கு விசேட அறிவித்தல்
2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று (17) இடம்பெறவுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று (17) இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், போட்டியை பார்க்க வரும் ரசிகர்களின் வசதிக்காக இன்று நண்பகல் 12.00 மணி முதல் மைதானத்தின் வாயில்கள் திறக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை, மைதானத்திற்கு அருகில் இன்று விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
"காரில் வருவோர் கெத்தாராம சந்தியில் இறங்க வேண்டிய நிலை ஏற்படும். வாகனங்களை நிறுத்துவதற்காக சுமார் 10 வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன.
இந்த வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்தும் வசதி உள்ளது. எவருக்கும் நீங்கள் எந்தப் பணமும் செலுத்தாமல் அந்த வாகன நிறுத்துமிடங்களில் வாகனத்தை நிறுத்தலாம்."
"மேலும், டிக்கெட் இருந்தால் மட்டுமே நுழைய முடியும். நுழைவு வாயில்களில் எக்காரணம் கொண்டும் டிக்கெட் வழங்கப்படுவதில்லை. மேலும், சிலர் போலி டிக்கெட்டுகளை விற்பனை செய்கின்றனர்.
மைதானத்தை சுற்றி அதனை வாங்க செல்ல வேண்டாம். கடந்த நாட்களில் இது போன்ற போலியான டிக்கெட்டுகள் வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டன. நீங்கள் நுழைவாயிலுக்குள் நுழையும் போது டிக்கெட்டுக்களின் QR குறியீடு பரிசோதிக்கப்படும்.
"கிரிக்கட் போட்டியை காண மைதானத்திற்கு நுழைய முடியாதவர்களுக்காக மாளிகாவத்தை பி.டி.சிறிசேன மைதானம் மற்றும் காலிமுகத்திடலிலும் இரண்டு திரைகள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றின் ஊடாக இன்றைய இறுதி போட்டியை காணலாம்.
"டிக்கெட்டுடன் செல்லும் போது , உங்கள் உடல் சோதனை செய்யப்படும். பயணப்பை சோதனை செய்யப்படும். மேலும் கூர்மையான ஆயுதங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டீர்கள்.
மேலும் கண்ணாடி தண்ணீர் போத்தல்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டீர்கள். தீப்பெட்டிகள், குழாய்கள், போஸ்டர்கள், லைட்டர்கள். அல்லது எரிவாயு அடங்கிய பொருட்கள் மற்றும் பாதுகாப்பிற்கு இடையூறு விளைவிக்கும் எதையும் கொண்டு செல்ல முடியாது.
மேலும் தலைக்கவசம், ஜெக்கெட் ஆகியவற்றை எடுத்துச் செல்ல முடியாது. இது குறித்து அவதானத்துடன் இருங்கள்” என்றார்.