புள்ளிப்பட்டியலில் தொட முடியாத உயரத்தில் தென்னாப்பிரிக்கா.. இந்தியாவின் நிலை?

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை, இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் ஐந்து முதல் பத்து வரையிலான இடங்களை பிடித்துள்ளன.

ஒக்டோபர் 25, 2023 - 10:44
புள்ளிப்பட்டியலில் தொட முடியாத உயரத்தில் தென்னாப்பிரிக்கா.. இந்தியாவின் நிலை?

நியூசிலாந்து அணியை முந்தி தென்னாப்பிரிக்கா ஐந்து போட்டிகளில் ஒரு தோல்வி, நான்கு வெற்றிகளை சந்தித்து 8 புள்ளிகளுடன் உள்ளது. பத்து அணிகளில் அதிக நெட் ரன் ரேட் கொண்ட அணியாகவும் தென்னாப்பிரிக்கா உள்ளது. அந்த அணியின் நெட் ரன் ரேட் 2.370 ஆகும். 

புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் இருக்கும் அணிகள் அரை இறுதிக்கு செல்லும். ஒரே அளவிலான புள்ளிகளை ஒன்றுக்கும் மேற்பட்ட அணிகள் வைத்திருந்தால் நெட் ரன் ரேட் அடிப்படையில் அரை இறுதிக்கு செல்லும் அணி தேர்வு செய்யப்படும் என்பதால் நெட் ரன் ரேட் இப்போதே முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

அந்த வகையில் அதிக நெட் ரன் ரேட் வைத்துள்ளது தென்னாப்பிரிக்கா. அந்த அணிக்கு அடுத்து அதிக நெட் ரன் ரேட் வைத்துள்ளது நியூசிலாந்து அணி. அந்த அணி ஐந்து போட்டிகளில் நான்கு வெற்றிகளை பெற்று 8 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நியூசிலாந்து அணியின் நெட் ரன் ரேட் 1.481 ஆகும்.

இந்தியா தான் ஆடிய ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ஆனால், நெட் ரன் ரேட் அடிப்படையில் மூன்றாவது இடத்தில் தான் உள்ளது. 

இந்தியாவின் நெட் ரன் ரேட் 1.353 ஆகும். தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்தியாவை விட அதிக நெட் ரன் ரேட் வைத்துள்ளன. அதிலும், தென்னாப்பிரிக்கா இந்தியாவால் எட்டிப் பிடிக்க முடியாத் உயரத்தில் உள்ளது.

தற்போது நிலவும் சூழ்நிலையில் இந்தியாவின் அரை இறுதி வாய்ப்புக்கு எந்த சிக்கலும் இல்லை என்றாலும் முதல் இடத்துக்கு தென்னாப்பிரிக்கா அணியால் பாதிப்பு வரலாம். தென்னாப்பிரிக்கா அணி இனி வரும் போட்டிகளில் எல்லாம் வென்றால் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.

தென்னாப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்த வங்கதேசம் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி நான்கு போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணிக்கு மேலே ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

புள்ளிப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து இருக்கும் நிலையில், நான்காவது இடத்தில் ஆஸ்திரேலியா நான்கு போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் உள்ளது. 

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை, இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் ஐந்து முதல் பத்து வரையிலான இடங்களை பிடித்துள்ளன.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!