ஜனாதிபதி ரணிலுடன் அமெரிக்காவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள்
ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயத்தில் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கொள்வார்கள் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது அமெரிக்க விஜயத்தின் போது மேற்கொண்ட முக்கிய சந்திப்புகளில் இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர்கள் காணப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயத்தில் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கொள்வார்கள் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
எனினும், அவர்களில் பலர் ஜனாதிபதியின் முக்கிய சந்திப்புகளில் பங்கேற்றுள்ளதை புகைப்படங்களின் மூலம் காணமுடிகிறது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை ஜனாதிபதி விக்ரமசிங்க சந்தித்த போது அங்கு இருந்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியின் ஆலோசகரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ருவான் விஜேவர்தன, ஜனாதிபதி கலந்துகொண்ட நிகழ்வொன்றின் புகைப்படத்தில் காணப்படுகின்றார்.
மேலும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன மற்றும் பிரேம்நாத் தொலவத்த மற்றும் தற்போது அரசாங்கத்தை ஆதரிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ் மற்றும் எஸ்.எம்.எம்.முஸ்ஸாரப் ஆகியோரும் இவ்வாறான சந்திப்புகளில் பங்கேற்று உள்ளதை புகைப்படங்களில் காணமுடிகின்றது.