'முஸ்லிம், இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற வார்த்தைகளை நீக்கவும்' உயரிய சபையில் கோரிக்கை
மதத்தின் பெயரால் பயங்கரவாதம் பற்றி பேசப்படும் போதெல்லாம், நாடாளுமன்றத்தில் பேசும் பெரும்பாலானவர்கள் முஸ்லிம் பயங்கரவாதத்தைப் பற்றி அதிகம் பேசுவதை நான் அவதானித்தேன்.

மதத்தின் பெயரிலான பயங்கரவாதம் பற்றி பேசும் போது, நாடாளுமன்றத்தில் முஸ்லிம் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை முதலில் நீக்க வேண்டும் என திகாமடுல்ல மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வார இறுதியில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப், நாடாளுமன்றத்தில் இந்த வார்த்தை அதிகமாக பயன்படுத்தப்பட்டதை தான் அவதானித்ததாகக் கூறினார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களை முன்னிலைப்படுத்தி, முஸ்லிம் பயங்கரவாதம் பற்றி பேசும் எவரும் திகனயிலே, அளுக்கமவிலே, அம்பாறையிலே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டவிழ்த்து விடப்படுவதை “சிங்கள பயங்கரவாதம்” என ஏன் கூறுவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.
"மதத்தின் பெயரால் பயங்கரவாதம் பற்றி பேசப்படும் போதெல்லாம், நாடாளுமன்றத்தில் (ஜூலை 12) பேசும் பெரும்பாலானவர்கள் முஸ்லிம் பயங்கரவாதத்தைப் பற்றி அதிகம் பேசுவதை நான் அவதானித்தேன். முதலில் இந்த நாடாளுமன்றம் போன்ற உயரிய சபைகளில் இருந்து இஸ்லாமிய பயங்கரவாதம், முஸ்லிம் பயங்கரவாதம் என்ற வார்த்தைகளை நீக்க வேண்டும்.”
முஸ்லிம் பயங்கரவாதம் என்ற சொல்லுக்கு எதிராக அமைதி வழியில் போராடி வருவதாக கூறும் மக்கள் பிரதிநிதி, உலக நாடுகள் முஸ்லிம் பயங்கரவாதம் என்ற வார்த்தையை தமது அரசியல் நலன்களுக்காக பயன்படுத்தி இஸ்லாத்திற்கு எதிராக செயற்படுவதாகவும், முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் அல்ல எனவும் வலியுறுத்தினார்.