அடைமழை காரணமாக பல பகுதிகளில் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை மட்டம் 3 (வெளியேறுங்கள் – சிவப்பு) அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

டிசம்பர் 18, 2025 - 10:31
அடைமழை காரணமாக பல பகுதிகளில் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழையைத் தொடர்ந்து, நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளுக்கு, இடம்பெயர வேண்டிய சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை மட்டம் 3 (வெளியேறுங்கள் – சிவப்பு) அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (18) அதிகாலை 2.30 மணிக்கு விடுக்கப்பட்டதுடன், நாளை (19) அதிகாலை 2.30 மணி வரை 24 மணித்தியாலங்கள் செல்லுபடியாகும் என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, கண்டி மாவட்டத்தின் தொலுவ, உடுதும்பற, மெததும்புற உள்ளிட்ட பகுதிகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, ஹங்குரன்கெத்த, நில்தண்டாஹின்ன, மத்துரட்ட பகுதிகளுக்கும் சிவப்பு எச்சரிக்கை நடைமுறையில் உள்ளது. அதேவேளை, கண்டி மாவட்டத்தின் பல பகுதிகள், குருநாகல் மாவட்டத்தின் ரிதிகம பகுதி மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா பகுதி ஆகியவற்றுக்கு எச்சரிக்கை மட்டம் 2 (அம்பர் – அவதானமாக இருங்கள்) அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளில் வசிப்பவர்கள் அவசர அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்கவும், தேவையானால் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!