கே.எல். ராகுல், ஜடேஜா: ஒரே டெஸ்ட் போட்டியில் 4000 ரன்கள் சாதனை!

கே.எல். ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 ரன்கள் மைல்கல்லை எட்டக் காத்திருக்கின்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்த வரலாற்றுச் சாதனை நிகழுமா? முழு விவரம் இங்கே!

ஒக்டோபர் 10, 2025 - 06:52
கே.எல். ராகுல், ஜடேஜா: ஒரே டெஸ்ட் போட்டியில் 4000 ரன்கள் சாதனை!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான கே.எல். ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவருக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை படைக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது. இவர்கள் இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டக் காத்திருக்கின்றனர்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை டெல்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. அந்த முதல் போட்டியில், கே.எல். ராகுல், துருவ் ஜுரெல் மற்றும் ஜடேஜா ஆகிய மூன்று வீரர்களும் சதம் விளாசினர்.

இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஜடேஜாவுக்கு 4,000 ரன்களை எட்ட இன்னும் 10 ரன்களும், கே.எல். ராகுலுக்கு 111 ரன்களும் தேவையாக உள்ளது. இவர்கள் இருவரும் ஒரே போட்டியில் இந்த 4,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்ட வாய்ப்புகள் அமைந்துள்ளன.

ரவீந்திர ஜடேஜா

இதுவரை 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா, 6 சதங்கள் மற்றும் 27 அரைசதங்கள் உட்பட மொத்தம் 3,990 ரன்களை விளாசி இருக்கிறார்.
 
ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் உச்சக்கட்ட ஃபார்மில் இருந்து வருகிறார்.

கடைசியாக அவர் விளையாடிய 7 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 659 ரன்களை விளாசி அசத்தியுள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸில் அவர் சிறப்பாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

கே.எல். ராகுலை விடவும் ஜடேஜா அதிக டெஸ்ட் ரன்களைச் சேர்த்திருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கே.எல். ராகுல்

இதுவரை 64 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள கே.எல். ராகுல், 11 சதங்கள் மற்றும் 19 அரைசதங்கள் உட்பட மொத்தம் 3,889 ரன்களைக் குவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டு ராகுலுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை அளித்துள்ளது.

அவர் சொந்த மண்ணில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு சதம் விளாசியதோடு, ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இருந்தே மிகச் சிறந்த ஃபார்மில் விளையாடி வருகிறார்.

இந்த இரு வீரர்களுமே மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கும் நிலையில், அதற்கேற்ப டெல்லி மைதானத்தின் பிட்சும் பேட்டிங்கிற்குச் சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணி பேட்ஸ்மேன்களின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!