ரணில் வெற்றிப்பெறுவது உறுதி: டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை
அந்த வாய்ப்பை பயன்படுத்தி இன்றைய ஜனாதிபதியுடன் சேர்ந்து பயணிப்பதன் ஊடாக நாடும் மக்களும் அதிக பயன்களை பெறமுடியும்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவுக்கான மக்கள் ஆதரவை பார்க்கும்போது, அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
முழங்காவில் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், “ரணில் விக்ரமசிங்கவின் ஆற்றல்களை நாட்டுக்கு பயன்படுத்தாமல் விடுவோமாயின் நாடும் மக்கள் மீண்டும் படுகுழியில் தள்ளப்படும் நிலை உருவாகும். எமது மக்களுக்கு தற்போது நாட்டின் தலைவரை தெரிவுசெய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
அந்த வாய்ப்பை பயன்படுத்தி இன்றைய ஜனாதிபதியுடன் சேர்ந்து பயணிப்பதன் ஊடாக நாடும் மக்களும் அதிக பயன்களை பெறமுடியும்.
நாம் எமது கொள்கைகளையோ எடுத்துக்கொண்ட பாதையையோ மாற்றியது கிடையாது. கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்துங்கள் அதனூடாக எமது மக்களுக்கான அனைத்தையும் படிப்படியாக வெற்றிகொள்ள முடியும் என்றே வலியுறுத்தி வருகின்றோம்.
அரசியலுக்காகவோ அல்லது வாக்குக்காகவோ எதையும் நான் பேசுவதில்லை. மக்கள் நலன் சார்ந்தே எனது அனைத்து செயற்பாடுகள் அமையும். அதனடிப்படையில் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்” என்றார்.