பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஸர்களே பொறுப்பு; உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கோட்டாபய ராஜபக்ஸ, மஹிந்த ராஜபக்ஸ, பஸில் ராஜபக்ஸ  உள்ளிட்ட பிரதிவாதிகளின் தவறான பொருளாதார முகாமைத்துவ தீர்மானங்களால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நவம்பர் 15, 2023 - 00:44
பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஸர்களே பொறுப்பு; உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

நாடு தற்​போது முகங்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஸ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஸ ஆகியோரே பொறுப்புக் கூற வேண்டும் என உயர்நீதிமன்றம், இன்று (14) மாலை தீர்ப்பளித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ஸ, மஹிந்த ராஜபக்ஸ, பஸில் ராஜபக்ஸ  உள்ளிட்ட பிரதிவாதிகளின் தவறான பொருளாதார முகாமைத்துவ தீர்மானங்களால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2019ஆம் ஆண்டிலிருந்து 2022ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் எடுத்த தவறான பொருளாதார முகாமைத்துவ தீர்மானங்கள் காரணமாக இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதிபதிகள் குழுவில் புவனேக அளுவிகாரே, விஜித் மலல்கொட மற்றும் முர்து பெர்ணான்டோ ஆகிய நீதியரசர்கள் குழாத்தினால் இந்த தீர்மானம் ஏகமனதாக அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பி.பி.ஜயசுந்தர, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஸ்மன் ஆகியோர் மனுவின் ஏனைய பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்த பின்னர் வர்த்தகர்களுக்கு வழங்கிய 681 பில்லியன் ரூபாய் வரி நிவாரணம், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அதிக தாக்கம் செலுத்தியதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதியை 203 ரூபாயாக பேணியமை, சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் அந்நிய செலாவணியில் பற்றாக்குறை நிலவிய போது 500 மில்லியன் டொலர் இறையாண்மை பிணை முறிகளை மீள செலுத்துவதற்கு எடுத்த தவறான பொருளாதார தீர்மானங்கள் இவற்றில் சிலவாகும்.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த தேசிய அறிஞர்கள் பேரவையின் உறுப்பினர்களான இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினருமான கலாநிதி மஹிம் மெண்டிஸ்,பேராசிரியரும் கலாநிதி அதுல சிறி சமரகோண் மற்றும் பேராசிரியரும் கலாநிதி நீல் மொராயஸ் ஆகியோர்  இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணையின் பின்னர் மனுதாரர்களுக்கு தலா 150,000 ரூபாய் செலுத்துமாறும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தலைமையிலான சட்டத்தரணிகளான விஷ்வ பீரிஸ், சந்தமல் ராஜபக்‌ஷ, சம்பத் விஜயவர்தன, எரங்க பெரேரா மற்றும் பிரமோத் பெரேரா ஆகிய சட்டத்தரணிகள் மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!