மாணவர்களுக்கு கட்டணம் அறவிடும் மேலதிக வகுப்புகளுக்கு தடை... வெளியானது அறிவித்தல்
மேலதிக வகுப்புகளில் பாடத்திட்டங்கள் நிறைவு செய்யப்படுவதாக பெற்றோர்கள் முறைப்பாடு

ஊவா மாகாணத்தில் மாணவர்களுக்கு கட்டணம் அறவிடப்பட்டு நடத்தப்படும் மேலதிக வகுப்புக்களுக்கு தடை விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளில் தரம் ஒன்று முதல் 5 வரையான வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடசாலை ஆசிரியர்களால் பாடசாலை நேரத்துக்கு மேலதிகமாக வார இறுதி நாட்களிலும் விடுமுறை தினங்களிலும் நடத்தப்படும் வகுப்புகள் குறித்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் இந்த தடை அமுலுக்கு வருவதாக ஊவா மாகாண கல்வி செயலாளர் காமினி மஹிந்தபால தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் உரிய நேரத்தில் நிறைவு செய்யப்படாமல், கட்டணம் அறவிட்டு நடத்தப்படும் மேலதிக வகுப்புகளில் பாடத்திட்டங்கள் நிறைவு செய்யப்படுவதாக பெற்றோர்கள் முறைப்பாடு செய்வதாக அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் சகல வலய கல்வி பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்வி செயலாளர் காமினி மஹிந்தபால கூறியுள்ளார்.