பிரபலங்கள் உயிரிழக்கும் சம்பவங்கள்... ஊடகங்களுக்கு அனுமதி இல்லை... அதிரடி அறிவிப்பு
இரு தினங்களுக்கு விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்துகொண்டது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியது. அதற்கும் முன்பாக நடிகர் மாரிமுத்து மரணம் அடைந்ததும் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இரு தினங்களுக்கு விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்துகொண்டது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியது. அதற்கும் முன்பாக நடிகர் மாரிமுத்து மரணம் அடைந்ததும் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதுபோன்ற நேரங்களில் பத்திரிகைகள், யூடியூப் சேனல்களின் செயல்பாடுகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதுகுறித்து அதிருப்தி எழுந்த நிலையில், தற்போது பிரபலங்கள் உயிரிழக்கும் சம்பவங்களில், மீடியாக்களுக்கு அனுமதி இல்லை என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீடியாக்களுக்கு அனுமதி கிடையாது
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா, இருதினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் திரையுலகினர் உட்பட பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதனையடுத்து விஜய் ஆண்டனியின் மகள் மறைவுக்கு, பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதேபோல், சில தினங்களுக்கு முன்னர் நடிகர் மாரிமுத்துவும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இந்த இரண்டு மரண சம்பவங்களிலும் மீடியாக்கள், யூடியூப் சேனல்களின் செயல்பாடுகள் பலரையும் முகம் சுளிக்க வைத்தன. இறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தச் செல்லும் பிரபலங்களிடம் மைக்கை நீட்டி பேட்டி எடுப்பதும், அவர்களிடம் இரங்கல் செய்திகளை வாங்குவதிலும் யூடியூப் சேனல்கள் போட்டிப் போடுவதை பார்க்க முடிந்தது.
அதுமட்டும் இல்லாமல் அஞ்சலி செலுத்த செல்பவர்களுக்கு வழிவிடாமல் இருப்பதும், இறுதி சடங்கு வரை லைவ்வாக ஒளிபரப்புவதும் வழக்கமாகி விட்டது.
மீடியாக்கள், யூடியூப் சேனல்களின் இத்தகைய செயல்பாடுகள், திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் விமர்சனத்துக்குள்ளானது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மன வருத்தப்படும் அளவிற்கு மீடியாக்கள் அநாகரிகமாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
நடிகர்கள் விவேக், மயில்சாமி, மனோபாலா என பலரது உயிரிழப்பு சம்பவங்களிலும், மீடியாக்கள் இப்படியாக நடந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, தமிழகத் திரைப்பட துறையைச் சேர்ந்தவர்கள் உயிரிழக்கும் சம்பவங்களில் மீடியாக்களுக்கு அனுமதி இல்லை என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இதுபற்றி தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா அறிக்கை விட்டுள்ளார். அதில், "மீடியாவினரின் இதுபோன்ற நாகரீகமற்ற செயல்கள் வேறுபடுத்திப் பார்க்க வைக்கின்றன. இவர்களுக்கும் நம் இழப்பிற்கும் சம்பந்தமே இல்லையோ என எண்ண வைக்கிறது."
"இதுபோன்ற நிகழ்வுகள் மனச் சங்கடத்தை உருவாக்கியுள்ளது. ஊடக தர்மத்தை மீறி நடந்துகொள்வதால் காணொலி செய்பவர்களை மரண வீட்டில் மறுக்க வேண்டிய விதிமுறைகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதற்கான செயல்பாடுகளை தீவிரப்படுத்துவது தயாரிப்பாளர்கள், திரைத்துறையைச் சேர்ந்த அனைவரது முக்கிய கடமையாகும். அப்போதுதான் நம் வீட்டு நிகழ்வுகளில் அநாகரீகம் தடுக்கப்படும்."
"ஒரு மூத்த கலைஞனாகவும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்களின் சங்கத் தலைவர் என்ற முறையிலும் ஊடகத்தினர் செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். காவல்துறையும் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி இல்லாமல் மீடியாக்களை அனுமதிக்க வேண்டாம் என்ற கோரிக்கையை வைக்கிறேன்" என பாரதிராஜா கூறியுள்ளார்.
இதனால், இனி பிரபலங்களின் மரண சம்பவங்களில் மீடியாக்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.