சுயேச்சை வேட்பாளராக களமிறங்கும் ஜனாதிபதி ரணில் - கட்டுப்பணம் செலுத்தப்பட்டது
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா கட்டுப்பணத்தை தாக்கல் செய்துள்ளார்.
ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் இன்று (26) காலை அவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வைப்புத் தொகையை இன்று (26) காலை 8.30 மணி முதல் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்படுவதற்கு முந்தைய நாளான ஆகஸ்ட் 14 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வைப்புச் செய்ய முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளர் 50,000 ரூபாயும் வேறு ஏதேனும் அரசியல் கட்சியால் அல்லது வாக்காளர்களால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளர் 75,000 ரூபாயும் செலுத்த வேண்டும்.
இதேவேளை, 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி மற்றும் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் திகதியை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலையும் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஜனாதிபதித் தேர்தல் 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடத்தப்படும் என்றும், வேட்புமனுக்கள் 2024 ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.