'அயோத்தி' ஓடிடி வெளியீட்டுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

இயக்குனர் சசிகுமார் நடிப்பில் வெளியான 'அயோத்தி' திரைப்படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏப்ரல் 11, 2023 - 19:43
'அயோத்தி' ஓடிடி வெளியீட்டுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

இயக்குனர் சசிகுமார் நடிப்பில் வெளியான 'அயோத்தி' திரைப்படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குனர் சசிகுமாரின் நடிப்பில், அண்மையில் வெளியான 'அயோத்தி' திரைப்படத்தின் திரைக்கதை தன்னுடைய கதை என்று கூறி பேராசிரியர் சங்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

அவரது மனுவில், ''தான் எழுதி தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்தில் கடந்த 2020ம் ஆண்டு "யாதும் ஊரே" என்ற தலைப்பில் பதியப்பட்ட திரைக்கதையை, தனது அனுமதி இல்லாமல் திருடி 'அயோத்தி' என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளனர். 

இந்தப் படத்தின் திரைக்கதை மீதான உரிமம் தனக்கு சொந்தமானது. எனவே, இந்த திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடைவிதிக்க வேண்டும். மேலும், பிற மொழிகளில் டப்பிங் செய்யும் உரிமையை வழங்கவும் தடை விதிக்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.சௌந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குநர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், ''அயோத்தி படத்தின் கதை கடந்த 2016ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. 

எனவே, மனுதரார் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. ஏற்கெனவே இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் ஓடிடி, இணையதள உரிமை, தொலைக்காட்சி உரிமைகள் வழங்க கூடாது என்ற கோரிக்கையை ஏற்கக்கூடாது" என்று வாதிட்டார். 

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, 'அயோத்தி' திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!