நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - NPP எம்.பி
நீதிமன்றங்களிலிருந்து நீதியை எதிர்பார்க்கும் பல இலங்கையர்கள் அது கிடைக்காமலேயே உயிரிழக்க நேரிட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் இருப்பது அண்மைய வரலாற்றில் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாகும் என சுட்டிக்காட்டிய ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், கடந்த ஜூன் மாதம் வரை, இலங்கையில் உள்ள நீதவான் நீதிமன்றங்களில் எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
"2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதியாகும்போது உயர் நீதிமன்றங்களில் 27,324 வழக்குகள் முடிவுக்குக் கொண்டுவரப்படால் இருந்தன. 2024 ஆம் ஆண்டு ஜூன்ம மாதம் 30ஆம் திகதியாகும்போது நீதவான் நீதிமன்றங்களில் 813,726 வழக்குகள் முடிவுக்குக் கொண்டுவரப்படால் இருந்தன."
மே 23, வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பின் போது, நீதி அமைச்சின் புள்ளிவிபரங்களை மேற்கோள் காட்டி உரையாற்றிய, ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி அனுஷ்கா திலகரத்ன, 2023 ஆம் ஆண்டின் இறுதியில் நீதவான் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகளின் எண்ணிக்கை எட்டு இலட்சத்தைத் தாண்டியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
"நீதியமைச்சில் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களுக்கு அமைய, 2023ஆம் ஆண்டு உயர் நீதிமன்றங்களில் 29,664 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் 21,937 வழக்குகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அதேபோல் நீதவான் நீதிமன்றங்களில் 2023ஆம் ஆண்டு நிறைவடைந்தபோது முடிவுக்குக் கொண்டுவரப்படாத வழக்குகளின் எண்ணிக்கை 805,502 ஆகும். சிறுவர் நீதவான் நீதிமன்றங்களில் 1,215 வழக்குகள் முடிவுக்குக் கொண்டுவரப்படாமல் காணப்படுகின்றன."
நீதிமன்றங்களிலிருந்து நீதியை எதிர்பார்க்கும் பல இலங்கையர்கள் அது கிடைக்காமலேயே உயிரிழக்க நேரிட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
"இந்த நாட்டு மக்களின் பிரச்சினை, இந்த நாட்டு மக்கள் நீதிமன்றத்தில் நீதியை எதிர்ப்பார்க்கின்றனர். நியாயமான நீதியை நீதிமன்றில் எதிர்பார்க்கின்றனர். இந்த வழக்கு என்று நிறைவடையும் என்பதே மக்கள் எப்போதும் எம்மிடம் கேட்கும் கேள்வி. இந்த பிரச்சினையில் இருந்து எப்போது விடுதலைப் பெறுவது? அவர்களின் வாழ்வில் எத்தனை நாட்கள் சில வழக்குகளுக்கு வரும் நபர்களுக்கு அவர்களின் வழக்கு குறித்த உத்தரவு கிடைக்கவில்லை. இறுதியில் அவர்களுக்கான நியாயத்தை அனுபவிக்க வாய்ப்பில்லை, அவர்கள் இறந்து போயிருக்கின்றார்கள்.."
சந்தேக நபர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வராமலேயே தடுத்து வைக்க முடியும் எனவும், தடுப்புக் காவல் காலத்தை நீட்டிக்க முடியும் எனவும், அவர்கள் இணையத்தின் (audio-visual link) ஊடாக நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க முடியும் எனவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அண்மையில் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.