அலைபேசி திருடப்பட்டு விட்டதா? உதவி செய்ய புதிய இணையதளம்
பொதுமக்கள், தங்களது தொலைந்த மற்றும் திருடுபோன செல்போன் குறித்த தற்போதைய நிலையை இணையதளம் மூலம் அறியும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள், தங்களது தொலைந்த மற்றும் திருடுபோன செல்போன் குறித்த தற்போதைய நிலையை இணையதளம் மூலம் அறியும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில், தமிழக சைபர் குற்றப்பிரிவு பொலிஸார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில், "மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத் தொடர்புத் துறை கடந்த மே 17-ந்தேதி டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை செயல்படுத்துவதற்காக குடிமக்களை மையமாகக் கொண்டு சஞ்சார் சாத்தி என்ற இணையதளத்தை தொடங்கியது.
சி.இ.ஐ.ஆர். என்ற இணையதளத்தில் பொதுமக்கள் தங்களுடைய தொலைந்த மற்றும் திருடு போன செல்போன்கள் குறித்து புகார் அளிக்கலாம்.
தொலைந்த மற்றும் திருடப்பட்ட செல்போன்களை கண்டறிய தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவு, தொலைத் தொடர்புத்துறையுடன் இணைந்து மாநகர காவல் ஆணையரகங்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் மூலம் அனைத்து காவல் நிலையங்களுக்கும் சி.இ.ஐ.ஆர். இணையதளத்தில் ஒரு கணக்கை தொடங்கியுள்ளது.
இதன்மூலம் திருடப்பட்ட செல்போன் ஐ.எம்.இ.ஐ. எண்ணை முடக்க உடனடியாக காவல்துறையினர் வலியுறுத்த முடியும். இந்த வலியுறுத்தலால் 24 மணி நேரத்துக்குள் ஐ.எம்.இ.ஐ. எண் முடக்கப்படும்.
இதனால் திருடப்பட்ட செல்போன், எந்த சட்ட விரோத செயல்களுக்கும் பயன்படுத்த முடியாது. இந்த இணையதளம் மூலம் பொதுமக்கள், தங்களது தொலைந்த மற்றும் திருடுபோன செல்போன் குறித்த தற்போதைய நிலையை அறியும் வசதி உள்ளது.
அதோடு மக்கள் 14422 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் செல்போனின் ஐ.எம்.இ.ஐ. எண் குறித்த உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள முடியும். இதில் செல்போன் வகை விவரங்கள் வழங்கப்படும்.
Tafcop சொந்தமான https://tafcop.sancharsaathi.gov.in/telecomUser/ என்ற இணையதளத்துக்குள் தங்கள் செல்போன் எண்ணை கொண்டு உள் நுழைந்தால், அவர்கள் பெயரில் எத்தனை எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற விவரத்தையும் மக்கள் பெற முடியும்." என்று அதில் கூறப்பட்டு உள்ளது.