முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்

மேற்படி சம்பவம் தொடர்பில் முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் தரப்புகளுடன் நானும் இணைகிறேன்.  உண்மை கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஒக்டோபர் 1, 2023 - 13:45
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்

" சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் நீதிபதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். எனவே, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய டி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்." - என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தின்போது இது தொடர்பில் பிரஸ்தாபிக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி டி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகப் பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறிய விவகாரம் தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு, 

" அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் பணியாற்றிய நீதிபதி டி.சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து நான் மிகவும் கவலை அடைந்துள்ளேன். 'குருந்தூர்' மலை விவகாரம் தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பை அடிப்படையாகக்கொண்டு அவருக்கு எதிராக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள விவகாரம் நீதித்துறையின் நிலை குறித்து கேள்வியை உருவாக்கியுள்ளது.

சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் நீதிபதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களுக்கு எதிரான  அச்சுறுத்தலானது நீதி மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான அச்சுறுத்தலாகும். எனவே,  நேர்மையுடன் நீதி வழங்குபவர்களைப் பாதுகாப்பதும், அவர்களுக்கு ஆதரவளிப்பதும் நமது கூட்டுப் பொறுப்பாகும்.

மேற்படி சம்பவம் தொடர்பில் முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் தரப்புகளுடன் நானும் இணைகிறேன்.  உண்மை கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

குருந்தூர்மலை வழக்கில் மட்டுமல்ல, நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தை பாதுகாப்பதிலும், நீதி நிலைநாட்டப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்." - என்றுள்ளது.

 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!