என்ன மாதிரி பவுலிங்.. சிராஜ் படைத்த மாஸ் ரெக்கார்ட்.. மொத்தமாக ஆடிபோன இலங்கை வீரர்கள்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் முகமது சிராஜ்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் முகமது சிராஜ்.
ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் ஷனகா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து இந்திய அணி தரப்பில் பும்ரா, சிராஜ், விராட் கோலி, ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் அணிக்கு திரும்பினார்.
அதேபோல் அக்சர் படேல் காயம் காரணமாக திரும்பியதால், அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். இந்த நிலையில் இலங்கை அணி தரப்பில் நிஷாங்கா - குசல் பெரேரா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இந்திய அணி தரப்பில் முதல் ஓவரை நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா வீசினார். அந்த ஓவரின் 3வது பந்தில் குசல் பெரேரா டக் அவுட்டாகி வெளியேறினார்.
இதன்பின் 2வது ஓவரை வீசிய சிராஜ், மெய்டன் செய்து அசத்தினார். தொடர்ந்து 3 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 8 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து விளையாடியது.
இதன்பின்னர் தான் இலங்கை ரசிகர்கள் கற்பனை கூட செய்திடாத அதிர்ச்சி காத்திருந்தது. சிராஜ் வீசிய முதல் பந்தில் நிஷாங்கா 2 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து 3வது பந்தில் சமரவிக்ரமா டக் அவுட்டாகி வெளியேறினார்.
பின்னர் 4வது பந்தில் அசலங்காவும் டக் அவுட்டாக, கடைசி பந்தில் தனஞ்செயா டி சில்வா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் காரணமாக சிராஜ் வீசிய ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டது. மொத்தமாக 4 ஓவர்கள் முடிவில் 12 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதன் மூலம் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையை சிராஜ் படைத்துள்ளார். அதன்பின் 6வது ஓவரில் இன்னொரு விக்கெட்டையும் சிராஜ் வீழ்த்த, குறைந்த பந்துகளில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி வீரர் என்ற சாதனையையும் சிராஜ் சமன் செய்துள்ளார்.
முன்னதாக இலங்கை அணியின் சமிந்தா வாஸ் 16 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.