ரஷியாவில் துப்பாக்கி சூடு; பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு
ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து மேற்கு பகுதியில் குரோகஸ் சிட்டி ஹால் என்ற இசை அரங்கத்தில், பிரபல இசைக்குழு ஒன்றின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து மேற்கு பகுதியில் குரோகஸ் சிட்டி ஹால் என்ற இசை அரங்கத்தில், பிரபல இசைக்குழு ஒன்றின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில், அரங்கிற்குள் திடீரென புகுந்த ஆயுதமேந்திய மர்ம கும்பல் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டது. உள்ளே கூடியிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டதுடன், அரங்கிற்கு தீ வைத்தது. இதன்போது, இசை அரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்து உள்ளதுடன், 100-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்து உள்ளதாக ரஷ்ய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
60 பேர் தீவிர சிகிச்சை பெறக்கூடிய நிலையில் உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. 70-க்கும் மேற்பட்ட அம்பியுலன்ஸ்கள் சம்பவ பகுதிக்கு சென்று உள்ளன.
இது, பயங்கரவாத தாக்குதலாக இருக்கும் என்றும் முதலில், கூறப்பட்ட நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே என்ற பயங்கரவாத அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொண்டுள்ளது.
ரஷியாவில் சில நாட்களுக்கு முன் நடந்த ஜனாதிபதி தேர்தலில் புதின் வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார். இந்த சூழலில், நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.