கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா மார்ச் 3ஆம் திகதி ஆரம்பம்
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 03ம் திகதி மற்றும் 04ம் திகதி நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் சிவபாலசுந்தரம் அறிவித்துள்ளார்.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 03ம் திகதி மற்றும் 04ம் திகதி நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் சிவபாலசுந்தரம் அறிவித்துள்ளார்.
இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளரின் ஒருங்கிணைப்பின் கீழ் யாழ்ப்பாணம் ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, நெடுந்தீவு பிரதேச செயலகம் மற்றும் தொடர்புடைய திணைக்களங்களின் முழுமையான ஒத்துழைப்புடன் இம்முறை திருவிழா நடைபெறவுள்ளது.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு எதிர்வரும்மார்ச் மாதம் 03 ஆம் திகதி அதிகாலை ஐந்து மணி முதல் யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்திலிருந்து குறிக்கட்டுவான் வரையில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எதிர்வரும் 03 ஆம் திகதி அதிகாலை ஐந்து மணி முதல் முற்பகல் 10 மணி வரை குறிக்கட்டுவான் வரை அரச பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
அத்துடன், அதிகாலை 06 மணி முதல் முற்பகல் 11 மணி வரை குறிக்கட்டுவான் முதல் கச்சத்தீவுக்கான படகு சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, போக்குவரத்து கட்டணமாக 2 ஆயிரம் ரூபாய் அறவிடப்படவுள்ளது.
மேலும் வெளிமாவட்டங்களிலிருந்து தங்களது சொந்த படகுகளில் வருகை தருபவர்கள், வசிப்பிடங்களுக்கு அருகிலுள்ள கடற்படை முகாமில் அனுமதியினை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதோடு, 03 ஆம் திகதி மாலை 06 மணிக்கு முன்னதாக கச்சதீவினை வந்தடையும் வகையில் பயணத்தினை ஆரம்பிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
கச்சதீவுக்கு வருகை தரும் பக்த்தர்களுக்கு காலை உணவினை கடற்படையினர் வழங்கவுள்ளதோடு, மது பாவனைக்கு முற்றிலுமாக தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடையுத்தரவினை மீறி மதுபானங்களை கொண்டு செல்லும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.