சீனாவின் மலிவான இறக்குமதி: பிரித்தானியாவின் பணவீக்கம் குறையும் வாய்ப்பு – உள்ளூர் தொழில்களுக்கு அச்சுறுத்தல்!
சீனாவிலிருந்து மலிவான விலையில் கார்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள், ஒலி உபகரணங்கள் போன்ற பொருட்கள் பிரித்தானியாவுக்கு அதிக அளவில் இறக்குமதி ஆவதால், அங்குள்ள பணவீக்கம் குறையும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
அமெரிக்காவின் கடுமையான வரிக் கொள்கைகளால் ஏற்றுமதி பாதிக்கப்பட்ட சீனா, தனது மலிவான பொருட்களை மாற்று சந்தைகளுக்கு திருப்பி விட்டுள்ளது. இதில் பிரித்தானியா முக்கியமான இலக்காக உருவெடுத்துள்ளது. சீனாவிலிருந்து மலிவான விலையில் கார்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள், ஒலி உபகரணங்கள் போன்ற பொருட்கள் பிரித்தானியாவுக்கு அதிக அளவில் இறக்குமதி ஆவதால், அங்குள்ள பணவீக்கம் குறையும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
தற்போது பிரித்தானியாவின் பணவீக்க விகிதம் 3.2% ஆக உள்ளது. 2026 நடுப்பகுதிக்குள் இது 2% இலக்கை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு சீனாவின் மலிவான இறக்குமதிகள் முக்கிய பங்கு வகிக்கும் என்று அரசு மற்றும் பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவுக்கான சீன ஏற்றுமதி 29% குறைந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 15% மற்றும் பிரித்தானியாவிற்கு 9% அதிகரித்துள்ளது. சீனாவின் வர்த்தக உபரி முதல் முறையாக 1 டிரில்லியன் டொலரைக் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் அறிவித்த பட்ஜெட்டில் எரிசக்தி மற்றும் எரிபொருள் வரிகளில் தளர்வு வழங்கப்பட்டதால், பணவீக்கம் மேலும் 0.5% குறையலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, இங்கிலாந்து வங்கி (Bank of England) வட்டி விகிதத்தை 3.75% ஆகக் குறைத்துள்ளது. 2026ஆம் ஆண்டில் இது மேலும் குறையும் சாத்தியம் உள்ளது.
இதுவரை, சீனாவிலிருந்து பிரித்தானியாவுக்கு 70 பில்லியன் பவுண்டு மதிப்பிலான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இவற்றில் கார்கள், மொபைல் போன்கள், ஒலிபெருக்கிகள் மற்றும் பொது நுகர்வுப் பொருட்கள் முக்கிய இடம் வகிக்கின்றன.
எனினும், இந்த மலிவான இறக்குமதி பிரித்தானியாவின் உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்துறைக்கு பெரும் சவாலாக மாறி வருகிறது. இதேபோல், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் சீன பொருட்கள் உள்ளூர் சந்தைகளை பாதிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், “ஐரோப்பிய ஒன்றியம் சீனாவின் மலிவு இறக்குமதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம்” என எச்சரித்துள்ளார்.
இந்த சூழலில், பிரித்தானிய அரசு உள்நாட்டு எஃகு உற்பத்தியாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க உறுதியளித்துள்ளது. சீனாவின் மலிவான இறக்குமதிகள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவினாலும், உள்ளூர் வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு நீண்டகால அச்சுறுத்தலாக மாறும் அபாயம் நிலவுகிறது.