ஆஸ்திரேலியாவை புரட்டி எடுத்த இந்தியா.. தொடரை வென்று தோல்விக்கு பழித் தீர்ப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

செப்டெம்பர் 25, 2023 - 10:59
ஆஸ்திரேலியாவை புரட்டி எடுத்த இந்தியா.. தொடரை வென்று தோல்விக்கு பழித் தீர்ப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

மொஹாலியில் முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற வாழ்வா சாவா என்ற கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடியது. 

இந்தூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் தற்காலிக கேப்டன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்தூர் மைதானத்தின் பவுண்டரி எல்லை வெறும் 55 மீட்டர் என்பதால் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களம் இறங்கியது. 

ருதுராஜ் கெய்க்வாட் இரண்டு பவுண்டரிகளை அடித்து விட்டு 8 ரன்னில் வெளியேற, சரிவில் இருந்த இந்திய அணியை ஸ்ரேயாஸ் ஐயரும், சுப்மன் கில்லும் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டனர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்க ஸ்ரேயாஸ் ஐயர் 86 பந்துகளில் சதம் அடித்தார்.

மறுமுனையில் இளம் வீரர் கில் 92 பந்துகளில் சதம் அடித்தார். இது நடப்பாண்டில் அவர் அடித்த ஏழாவது சதமாகும். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 200 ரன்களை சேர்த்தது. 

ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களிலும், கில் 104 ரன்களிலும் அடுத்தடுத்த ஆட்டம் இழந்தனர். 18 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்த நிலையில் இசான் கிஷன் பெவிலியன் திரும்பினார். இதனை தொடர்ந்து கே.எல் ராகுலும் சூரியகுமார் யாதவும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை பொளந்து எடுத்தனர்.

ராகுல் 38 பந்துகளில் 52 ரன்கள் விளாச சிறப்பாக விளையாடிய சூரியகுமார் யாதவ் தன்னுடைய டி20 இன்னிங்சை இன்று வெளிப்படுத்தினார். அவர் 37 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்தார். 

இதில் ஆறு பவுண்டரிகளும் ஆறு சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 399 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகள் எடுத்தது. 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.

இதில் ஆட்டத்தில் இரண்டாவது ஓவரிலே பிரசித் கிருஷ்ணா அபாரமாக பந்து வீசி தொடக்க வீரர் ஷார்ட் மற்றும் ஸ்மித் ஆகியோர் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினார். 

இதன் மூலம் டேவிட் வார்னர் மற்றும் லாபர்ஸ்சேன் ஜோடி ஆஸ்திரேலிய அணியை சர்வில் இருந்து மீட்க போராடியது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 33 ஓவராக குறைக்கப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்கு 317 ரன்கள் என மாற்றி அமைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடி 39 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதேபோன்று மார்னஸ் லாபஸ்சேன் 27 ரன்களில் அஸ்வின் ஓவரில் அவுட் ஆக ஜோஸ் இங்கிலீஷில் 6 ரன்னில் வெளியேறினார். 

அஸ்வின் ஏழு பந்துகள் இடைவெளியில் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதேபோன்று ஜடேஜாவும் அலெக்ஸ் கேரி மற்றும் ஏடன் சம்பா ஆகியோர் விக்கெட்டுகளை கைப்பற்ற கேமரான் கிரீன் 19 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

எனினும் இறுதியில் 9வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சென் அப்பார்ட் மற்றும் ஹேசல்வுட் அதிரடியாக விளையாடி 50 ரன்களுக்கு மேல் சேர்த்தது. குறிப்பாக சென் அப்பாட் 32 பந்துகளில் எல்லாம் 51 ரன்கள் சேர்த்தார். இது ஆஸ்திரேலியாவின் தோல்வி விகிதத்தை குறைக்கவே பயன்பட்டது தவிர, வெற்றியை தரவில்லை.

கடைசி கட்டத்தில் இந்தியா 2 கேட்ச்களையும் தவறவிட்டது, ஆட்டத்தின் கடைசி அரைமணி நேரம் மட்டும் இந்தியா மோசமாக விளையாடியது. எனினும் ஷமி ஹேசல்வுட் விக்கெட்டையும், ஜடேஜா அப்பாட் விக்கெட்டையும் கைப்பற்ற, ஆஸ்திரேலிய அணி 28.2 ஓவரில் 217 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 99 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!