அசலங்க சுழலில் வீழ்ந்தது இந்தியா; இலங்கை அசத்தல் வெற்றி!
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்க முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இத்தொடரில் முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் தலா 230 ரன்களைச் சேர்த்து போட்டியை டையில் முடித்தனர்.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்க முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்க மற்றும் அவிஷ்க ஃபெர்னாண்டோ இணை தொடக்கம் கொடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் முதல் ஓவரை முகமது சிராஜ் வீசினார். அதன்படி சிராஜ் வீசிய இன்னிங்ஸின் முதல் பந்தை எதிர்கொண்ட பதும் நிஷங்க விக்கெட்டை இழந்து இலங்கை அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
அதன்பின் அவிஷ்க ஃபெர்னாண்டோவுடன் இணைந்த குசால் மெண்டிஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட்டை தடுத்தார்.
மேற்கொண்டு இருவரும் தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாச அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயர்ந்தது.
இதன்மூலம் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
பின்னர் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அவிஷ்க ஃபெர்னாண்டோ 5 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 3 பவுண்டரிகளுடன் 30 ரன்களைச் சேர்த்திருந்த குசல் மெண்டிஸும் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
தொடர்ந்து களமிறங்கிய சதீர சமரவிக்ரம - கேப்டன் சரித் அசலங்க இணை ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினர். பின் 14 ரன்கள் எடுத்த நிலையில் சதீர சமரவிக்ரம விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஜனித் லியனகே 12 ரன்களுக்கும், கேப்டன் சரித் அசலங்க 25 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.
இதனால் இலங்கை 136 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த துனித் வெல்லாலகே - கமிந்து மெண்டிஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அபாரமாக விளையாடிய துனித் வெல்லாலகே அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசியதன் மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களை கடந்ததுடன் அணியின் ஸ்கோரும் 200 ரன்களை தாண்டியது.
இதில் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட துனித் வெல்லாலகே ஒரு பவுண்டரி 2 சிக்ஸர்கள் என 39 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதேசமயம் இறுதிவரை அதிரடி காட்டிய கமிந்து மெண்டிஸ் 4 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாக, மறுபக்கம் அகில தனஞ்செய 15 ரன்களில் ரன் அவுட்டானார்.
இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்களைக் குவித்தது. இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து, இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா பவுண்டரியும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டதுடன் 29 பந்துகளில் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார்.
மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அசத்தினர். அதன்பின் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 64 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா தனது விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீரரான ஷுப்மன் கில்லும் 35 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் விராட் கோலி 14 ரன்களிலும், ஷிவம் தூபே ரன்கள் ஏதுமின்றியும், ஸ்ரேயாஸ் ஐயர் 7 ரன்களிலும், கேஎல் ராகுல் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து ஜெஃப்ரி வண்டர்சே பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனால் இந்திய அணி 147 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது, பின்னர் இணைந்த அக்ஸர் படேல் - வாஷிங்டன் சுந்தர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர்.
இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்ஸர் படேல் அரைசதத்தை நெருங்கிய நிலையில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அவரைத்தொடர்ந்து அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த வாஷிங்டன் சுந்தரும் 15 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்துகளமிறங்கிய டெய்ல் எண்டர்கள் முகமது சிராஜ் 4 ரன்களிலும், அர்ஷ்தீப் சிங் 3 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 42.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இலங்கை அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜெஃப்ரி வண்டர்சே 6 விக்கெட்டுகளையும், கேப்டன் சரித் அசலங்க 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.
இதன்மூலம் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலையைப் பெற்றுள்ளது.
இதனையடுத்து தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 07ஆம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ளது.