உலககோப்பை அரையிறுதிக்கு செல்லும் 4 அணிகள் இவைதான்! பிரபலங்கள் கணிப்பு
வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்க உள்ள ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் தற்போது இந்தியா வந்துள்ளது.

வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்க உள்ள ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் தற்போது இந்தியா வந்துள்ளது.
இந்த தொடருக்கான பயிற்சி ஆட்டம் இன்று முதல் வரும் மூன்றாம் தேதி வரை நடைபெறுகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து பலம் வாய்ந்த அணியாக விளங்கினாலும், சொந்த மண்ணில் நடைபெறுவதால் இந்தியா கோப்பையை 12 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றும் என ரசிகர்கள் நம்பிக்கையில் இருக்கின்றனர்.
மேலும் ஆஸ்திரேலியா ,பாகிஸ்தான் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற அணிகளும் தற்போது பலமாக விளங்குவதால் இந்தத் தொடரில் யார் வெற்றி பெறுவார்கள்? யார் வெளியே செல்வார்கள் என்று கணிக்க முடியாத நிலையில் இருக்கிறது.
இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற வெஸ்ட் இண்டீஸ் இந்த தொடரில் தகுதி பெறவில்லை. இந்த நிலையில் உலககோப்பை வெல்லப்போவது யார் என்பது குறித்து கணிக்க முடியாவிட்டாலும் அரை இறுதிச்சுற்றுக்கு செல்லப் போகும் அணி எது என்பது குறித்து முன்னாள் நட்சத்திரங்கள் கணித்திருக்கிறார்கள்.
தென்னாப்பிரிக்கா வீரர் ஜாக் காலிஸ், இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு செல்லும் என கணித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பின்ச், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு செல்லும் என குறிப்பிட்டு இருக்கிறார்.
கிறிஸ் கெயில், இந்தியா ,பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என அரையிறுதிக்கு செல்லும் அணியை கணித்துள்ளார். இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கம்பீர், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரை இறுதிக்கு செல்லும் என தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் ஜாம்பவான் கவஸ்கர் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா,தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு தன்னுடைய அரை இறுதி வாய்ப்பை கொடுத்திருக்கிறார்.
முன்னாள் ஆல் கவுண்டர் இர்பான் பதான், இந்தியா, இங்கிலாந்து,தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா என்றும் முரளி கார்த்திக், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் என்றும் சிஎஸ்கே வீரர் வாட்சன் ,இந்தியா ,ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் என்றும் கணித்திருக்கிறார்கள்.
சஞ்சய் மஞ்சரேக்கர் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு செல்லும் என கணித்திருக்கிறார்.
இதேபோன்று முன்னாள் சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளை கணித்திருக்கிறார். இந்தப் பத்து பேரும் தங்களது கணிப்பில் இந்தியாவை சொல்லி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.