பறிபோன 4 முக்கிய வாய்ப்புகள்... ரோஹித் சர்மா பிடிவாதத்தால் ஏற்பட்டுள்ள சிக்கல்!
இந்திய அணியின் ரோஹித் சர்மா கேப்டன் ஆகும் முன்பு அவரது பேட்டிங் வேறு மாதிரி இருந்தது. முதல் 30 - 40 ரன்கள் எடுக்கும் வரை அவரது ஸ்ட்ரைக் ரேட் 100-ஐ ஒட்டியே இருக்கும்.

இந்திய அணியின் ரோஹித் சர்மா கேப்டன் ஆகும் முன்பு அவரது பேட்டிங் வேறு மாதிரி இருந்தது. முதல் 30 - 40 ரன்கள் எடுக்கும் வரை அவரது ஸ்ட்ரைக் ரேட் 100-ஐ ஒட்டியே இருக்கும்.
அதற்குள் அவர் பிட்ச்சின் தன்மை, பவுலிங்கின் தரம் ஆகியவற்றை கணித்து விடுவார். அதை வைத்து அவரது ஆட்டம் வேகம் எடுக்கும். அரைசதம் கடந்தும் அதிரடி ஆட்டம் ஆடும் அவர் எளிதாக சதம் கடப்பார்.
ஆனால், கடந்த ஓராண்டாக அவர் பேட்டிங் அணுகுமுறை முற்றிலும் மாறி இருக்கிறது. முதல் ஐந்து ஓவர்கள் முடியும் போதே அவர் ஸ்ட்ரைக் ரேட் 100-ஐ தாண்டி விடுகிறது. ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரி அடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தை அவராகவே உருவாக்கிக் கொண்டுள்ளார்.
இதன் காரணமாக, இந்திய அணியின் முதல் 20 ஓவர் ஸ்கோர் எப்போதும் அதிவேகமாக கிடைக்கிறது. அதே சமயம், ரோஹித் சர்மா சற்று விரைவாகவே ஆட்டமிழந்து விடுகிறார். அதனால், மிடில் ஆர்டர் வீரர்கள் மேல் அழுத்தம் விழுகிறது.
ஆனால், ரோஹித் சர்மா திட்டமே வேறு. மிடில் ஆர்டர் வீரர்களோ, துவக்க வீரர்களோ யாராக இருந்தாலும் பந்துகளை வீணடிக்கக் கூடாது. தவறான ஷாட் ஆடி விக்கெட் இழக்காமல் இருக்கும் அதே சமயம், ரன் ரேட் அதிகமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதை மற்றவர்களை செய்ய சொல்வதை விட கேப்டனாக தானே இதை முன் நின்று செய்து காட்டினால் மற்றவர்களும் இதை பின்பற்றுவார்கள் என்பதே அவரது விடாப்பிடியான கொள்கையாக இருக்கிறது.
இந்த உலகக்கோப்பை தொடரில் மட்டும் கடைசி நான்கு போட்டிகளில் தன் சுய சாதனைகளை கண்டு கொள்ளாமல், 48, 46 ரன்களில் ஆட்டமிழந்து இரண்டு அரைசதங்களையும், 86, 87 ரன்களில் ஆட்டமிழந்து இரண்டு சதங்களையும் தவற விட்டுள்ளார்.
ஆனால், அவர் அதைப் பற்றி கவலைப்படவில்லை. ரோஹித் சர்மாவின் இந்த அணுகுமுறை தவறு என்று கூறி விட முடியாது. அதே சமயம், மிடில் ஆர்டரில், ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல், ஜடேஜா போன்றோர் இன்னும் பொறுப்பாக ஆட வேண்டும்.