நீர்மின்சார உற்பத்தி குறைந்து அனல் மின்சார உற்பத்தி அதிகரிக்கும்
இந்த நாட்களில் நீர்மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்ட போதிலும் அதனைத் தொடர முடியாது என இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வறட்சியான காலநிலை காரணமாக எரிபொருள் மற்றும் அனல் மின் நிலையங்களில் இருந்து மின்சார உற்பத்தியை மே மாத நடுப்பகுதி வரை அதிகரிக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
பெப்ரவரி, மார்ச் மாதங்களில் மழைவீழ்ச்சி குறைவாகவே காணப்படுவதாகவும், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபையின் அனுமதியுடன் இந்த நாட்களில் நீர்மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்ட போதிலும் அதனைத் தொடர முடியாது என இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையங்கள் ஸ்தாபிக்கப்படுவது 10 வருடங்கள் தாமதமாகி வருவதாகவும், இயற்கை எரிவாயு மின் நிலையங்களை நிறுவுவதன் மூலம் எரிபொருள் பயன்படுத்தப்படும் மின் நிலையங்களின் செலவை 50 வீதத்தால் குறைக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டில் 212 சிறிய நீர்மின் நிலையங்கள் தனியார் துறையினரிடம் உள்ளதுடன், மேற்கூரையில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்பவர்களின் எண்ணிக்கை சுமார் 90,000 என்றும் அவர் கூறினார்.
நாட்டின் மின்சார உற்பத்தியை அதிகரிக்க திரவ எரிபொருள் மின் உற்பத்தி நிலையங்கள் தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்கு ஏதாவது நேர்ந்தால், எதிர்காலத்தில் மின்வெட்டு ஏற்படக்கூடும் எனவும், இதன் காரணமாக அடுத்த இரண்டு மூன்று வருடங்களில் மின் உற்பத்தி நிலையங்களின் தேவை நிச்சயம் ஏற்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.