வாகன இறக்குமதி தடை இன்றுடன் நீக்கம் - முழு விவரம் இதோ!
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை 90 நாட்களுக்குள் பதிவு செய்யத் தவறினால் 3 சதவீத தாமதக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்

வாகன இறக்குமதிக்குத் விதிக்கப்பட்டிருந்த தடை இன்று (01) முதல் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் நேற்று வெளியானது.
இதற்கமைய, தனியார் வாகனங்கள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள், பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், வணிக மற்றும் பொருட்கள் போக்குவரத்துக்கான வாகனங்கள் என்பவற்றை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட இறக்குமதியாளர்கள், அரச நிறுவன விதிகளுக்கு உட்பட்டு அவசியமான வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும்.
அத்துடன், இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை 90 நாட்களுக்குள் பதிவு செய்யத் தவறினால் 3 சதவீத தாமதக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், அவ்வாறான வாகனத்தைப் பதிவு செய்வதற்கான செலவு, காப்பீடு மற்றும் கப்பல் கட்டணம் என்பவற்றில் 45 சதவீதத்தையும் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, தற்போது அமுலில் உள்ள 20 சதவீத தீர்வை வரியுடன் அதற்கான 20 சதவீத நிறையிடப்பட்ட வரி அடங்கலான முழு தீர்வை வரியை இறக்குமதியாளர்களுக்கு 30 சதவீதமாகத் திருத்துவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.