உள்ளூராட்சி சபைத் தேர்தல் இன்று: அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள்: தேர்தல்கள் ஆணைக்குழு

நாடளாவிய ரீதியில் இன்று 6 ஆம் திகதி  உள்ளூராட்சிசபைத் தேர்தல் இடம்பெறுகின்றது. 

மே 6, 2025 - 11:21
மே 6, 2025 - 11:38
உள்ளூராட்சி சபைத் தேர்தல் இன்று: அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள்: தேர்தல்கள் ஆணைக்குழு

நாடளாவிய ரீதியில் இன்று 6 ஆம் திகதி  உள்ளூராட்சிசபைத் தேர்தல் இடம்பெறுகின்றது. 

339 உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை (6) காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. 

சுதந்திரமானதும் நீதியானதுமான வகையில் தேர்தலை நடத்த நாட்டின் சட்டம் மற்றும் பொது ஒழுங்கை முறையாக கடைபிடிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளவர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். 

அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும். நாட்டின் சட்டம் மற்றும் பொதுஒழுங்கை நாட்டு மக்கள் அனைவரும் முறையாக கடைப்பிடிக்க வேண்டும். 

வாக்கெடுப்பு நிலையத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் முழு வாக்கெடுப்பு நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்படும். ஆகவே, அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

அரச மற்றும் தனியார்துறை சேவையாளர்கள் வாக்களிக்கச் செல்வதற்கு இயலுமான வகையில் விடுமுறை வழங்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தோம். 

ஒருசில தனியார் துறையினர் தமது சேவையாளர்கள் வாக்களிக்க செல்வதற்கு விடுமுறை வழங்கவில்லை என்று ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. 

ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய செயற்படுமாறு தனியார் துறை சேவை வழங்குநர்களிடம் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

தேசிய அடையாள அட்டை, வாகன அனுமதி பத்திரம் மற்றும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஆகியவற்றை வாக்களிக்கும் போது எடுத்து செல்ல வேண்டும்.

வாக்குச்சீட்டில் கட்சிகளின் பெயர்களுக்கு எதிரே கட்சிகளின் சின்னங்களும் சுயேச்சைக்குழுக்களின் பெயர்களுக்கு எதிரே சுயேச்சைக் குழுக்களின் சின்னங்களும் இருக்கும், அதற்கு எதிராக வெற்றுக்கட்டம் இருக்கும், அதில் புள்ளடி (X) இடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

வாக்குச்சீட்டில் எழுதவோ, சித்திரம் கீறவோ, கிறுக்கவோ, எண்ணங்களை எழுதவோ, பெயர்களை எழுதவோ வேண்டாம். புள்ளடி (X) இடப்படாத எந்தவொரு வாக்குச்சீட்டும் நிராகரிக்கப்படும் என்றார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!