மர்மமான முறையில் குடும்பப் பெண் சடலமாக மீட்பு

சம்பவம் நடைபெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கேமராவின் காணொளிகளை சேமிக்கும் கருவி (DVR) கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மே 31, 2025 - 14:29
மர்மமான முறையில் குடும்பப் பெண் சடலமாக மீட்பு

அடித்து தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட குடும்பப் பெண்ணின் சடலம், பெரிய நீலாவணை பொலிஸாரால் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அம்பாரை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டம் -  பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனித்திருந்த 38 வயது மதிக்கத்தக்க திருமதி மனோதர்ஷன் விதுஷா என்ற குடும்பப்பெண் மீது இப்படுகொலை நேற்று வெள்ளிக்கிழமை (30) மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இரு பிள்ளைகளின் தாயான குறித்த பெண் மீது கழுத்து மற்றும் தலை உள்ளிட்ட பகுதில் காயங்கள் ஏற்படக் கூடிய வகையில் அடித்து தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மரணமடைந்த குடும்ப பெண்ணின் கணவர், வெளிநாடு ஒன்றில் தொழில் நிமிர்த்தம் தங்கியுள்ளதாகவும் சம்பவம் நடைபெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கேமராவின் காணொளிகளை சேமிக்கும் கருவி (DVR)கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண், அவரது வீட்டில் அடித்து படுகொலை செய்யப்பட்ட நிலைமை தொடர்பில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் சம்பவ இடத்திற்கு சென்று மேற்பார்வை செய்திருந்தார்.

இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் அம்பாறை தடயவியல் பொலிஸார் ஸ்தலத்திற்கு வருகை தந்து மோப்பநாய் உதவிகளுடன் சந்தேக நபர்கள்இ தடயங்கள் குறித்து  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சம்பவம் இடம்பெற்று வீட்டுக்கு வருகை தந்த கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுத்தீன் மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன் உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனைக்காக அம்பாரை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இக்கொலை தொடர்பான விரிவான விசாரணைகளை பெரிய நீலாவணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(பாறுக் ஷிஹான்)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!