இரண்டு பெண்களுடன் காரை கடத்திய நபர்: கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு; முழுவிவரம்
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் நேற்று (12) நள்ளிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளது.

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் நேற்று (12) நள்ளிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளது.
நேற்று, தமது உத்தரவை மீறி தப்பியோடிய கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதன்போது, குறித்த காரை சந்தேகநபர் திருடியமை தெரியவந்துள்ளது.
நேற்று இரவு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாசல வீதி, பகுதியில் கர்ப்பிணி மனைவி மற்றும் தாயுடன் காரில் வந்த நபர் ஒருவர், இயந்திரம் இயங்கும் நிலையில் காரை நிறுத்திவிட்டு கொட்டாஞ்சேனை வீதியிலுள்ள உணவகம் ஒன்றிற்கு உணவு வாங்குவதற்காக சென்றுள்ளார்.
அப்போது, சாரதியின் மனைவியும் தாயும் உள்ளே இருக்கும் போது இயந்திரம் இயங்கும் நிலையில் இருந்த காரை, அங்கு வந்த சந்தேக நபர் செலுத்திச் சென்றுள்ளார்.
அதன்போது, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு விசாரணைக்காக கெப் வண்டியில் வந்த மட்டக்குளி பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர், இந்த கார் திருடப்பட்டமை தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து, காரை துரத்திச் சென்று நிறுத்துமாறு சைகை காட்டினர்.
எவ்வாறாயினும், பொலிஸாரின் உத்தரவை மீறி சந்தேக நபர் காரை ஓட்டிச் சென்ற போது, பொலிஸ் உத்தியோகத்தர்கள் இரண்டு முறை துப்பாக்கிச்சூடு நடத்தி கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளூமெண்டல் ரயில் பாதைக்கு அருகில் காரை நிறுத்தியுள்ளனர்.
அதிகாரிகள் காரை அணுகியபோது சந்தேக நபர் காரை விட்டு இறங்கி தப்பியோடியுள்ளதுடன், காரில் இருந்த இரண்டு பெண்களுக்கும் காயம் ஏற்படவில்லை என்று பொலிஸார் கூறியுள்ளனர்.
தப்பியோடிய சந்தேகநபரை கைது செய்ய கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.