தாமதமாக நுழையும் உலகக்கோப்பை நாயகன்.. கசிந்த இங்கிலாந்து அணியின் மாஸ்டர் பிளான்!
இங்கிலாந்து அணி அவரை உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யவில்லை. ஆனால், அவர் அணியில் இடம் பெற்றால் எதிரணிகளுக்கு திண்டாட்டம் தான்.

இங்கிலாந்து அணி 2019 உலகக்கோப்பை தொடரை வெல்ல காரணமாக இருந்த ஸ்பெஷலிஸ்ட் வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடாமல் இருந்தார்.
தற்போது தான் அவர் ஆடத் துவங்கி இருக்கிறார். இந்த நிலையில், இங்கிலாந்து அணி அவரை உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யவில்லை. ஆனால், அவர் அணியில் இடம் பெற்றால் எதிரணிகளுக்கு திண்டாட்டம் தான்.
2019 உலகக்கோப்பை தொடரில் ஆர்ச்சர் அதிவேகத்தில் பந்து வீசியதோடு 11 போட்டிகளில் 20 விக்கெட்களை அள்ளினார். அவரது பந்துவீச்சு சராசரி 23.05 ஆகவே இருந்தது. இறுதிப் போட்டியில் சூப்பர் ஓவரை வீசி இங்கிலாந்து அணியின் வெற்றியிலும் பெரும் பங்கு வகித்தார் ஆர்ச்சர்.
அப்படி ஒரு வீரரை மீண்டும் உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்ய இங்கிலாந்து அணி விரும்பினாலும், அவர் இப்போதுதான் காயத்தில் இருந்து குணமடைந்து போட்டிகளில் ஆடத் துவங்கி இருக்கிறார்.
அவரை அணியில் தேர்வு செய்வது விஷப் பரீட்சை. அவர் ஃபார்மில் இல்லை என்றால் உலகக்கோப்பை தொடரின் நடுவே அவரை விடுவித்து வேறு வீரரையும் மாற்றிக் கொள்ள முடியாது.
அதன் காரணமாக இங்கிலாந்து அணி அவரை அணியில் சேர்க்கவில்லை. அதே சமயம், அவர் தொடர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்பின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். தற்போது அவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி வருவதை அவர்கள் உறுதி செய்துள்ளனர்.
உலகக்கோப்பை அணியில் 15 வீரர்களில் ஒருவராக ஜோப்ரா ஆர்ச்சரை தேர்வு செய்வது விஷப் பரீட்சை என்றாலும், உலகக்கோப்பை தொடரின் நடுவே இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் ஐசிசி அனுமதியுடன் அவரை நீக்கி விட்டு வேறு மாற்று வீரரை அணியில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஜோப்ரா ஆர்ச்சர் தற்போது உள்ள நிலையில் நிச்சயம் மூன்று - நான்கு போட்டிகளில் தொடர்ந்து ஆடலாம். எனவே, பாதி தொடரில் யாரேனும் இங்கிலாந்து பந்துவீச்சாளருக்கு காயம் ஏற்பட்டால் ஜோப்ரா ஆர்ச்சரை இங்கிலாந்து அணி அழைக்கும் என முன்பே ஒரு தகவல் கசிந்தது.
முன்னாள் இங்கிலாந்து கேப்டனும், ஆலோசகருமான நசிர் ஹுசைன் கடந்த சில நாட்களாக பேட்டிகளில் ஜோப்ரா ஆர்ச்சரை குறித்து பேசி வருவதை வைத்து பலரும் இப்போதே அவர்கள் திட்டத்தை கணிக்கத் துவங்கி விட்டனர்.