'இலத்திரனியல் திரைகளைப் பார்வையிட சிறார்களை அனுமதிக்க வேண்டாம்'
இரண்டு வயதுக்கு குறைவான சிறுவர்கள் இலத்திரனியல் திரைகளைப் பயன்படுத்துவதால் அவர்களின் மூளை வளர்ச்சிக்கு பாரிய அழுத்தம் ஏற்படுவதாகவும் இதன் தாக்கம் அவர்கள் வளர்ந்து 10 வயது தொடக்கம் 12 வயதை அடையும் போது வெளிப்படுவதாகவும் தெரிவித்தார்.

மஹேஸ்வரி விஜயனந்தன்
இரண்டு வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு எவ்விதத்திலும் கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட இலத்திரனியல் திரைகளுடன் பொழுதைக் கழிப்பதற்கு அனுமதிக்க வேண்டாம் என, உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளதாக சிறுவர் மற்றும் இளம்பருவ மனநல மருத்துவரும் ஆலோசகருமான உள, நலன் தொடர்பான விசேட வைத்தியர் தர்சனி ஹெட்டிஆராச்சி தெரிவித்தார்.
இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
இரண்டு வயதுக்கு குறைவான சிறுவர்கள் இலத்திரனியல் திரைகளைப் பயன்படுத்துவதால் அவர்களின் மூளை வளர்ச்சிக்கு பாரிய அழுத்தம் ஏற்படுவதாகவும் இதன் தாக்கம் அவர்கள் வளர்ந்து 10 வயது தொடக்கம் 12 வயதை அடையும் போது வெளிப்படுவதாகவும் தெரிவித்தார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, 2 தொடக்கம் 5 வயதுக்கு இடைப்பட்ட சிறார்கள் இலத்திரனியல் திரைகளை அரை மணித்தியாலம் தொடக்கம் 1 மணித்தியாலயம் வரையான காலப்பகுதிக்குள் மாத்திரமே அனுமதிக்க வேண்டும் என்பதுடன், பெரியவர்களின் கண்காணிப்பின் கீழேயே இந்த நேரம் ஒதுக்கப்பட வேண்டும்
என்றும் தெரிவித்தார்.
அதேபோல் 5 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் கல்வி நடவடிக்கைகளுடன் தமது இலத்திரனியல் பாவனையை 1 மணித்தியாலயமாக மட்டுப்படுத்த வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்துள்ளது என்றார்.
மேலும், தற்போதைய சமூகவலைத்தள பாவனையால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும் தரப்பினராக 14 தொடக்கம் 16 வயதுக்கு இடைப்பட்டவர்கள் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
குறித்த வயதுக்குட்ட இளையவர்கள் தமது உணர்வுகளுக்கு அமையவே அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுக்கின்றனர். குறித்த வயதுகளில் அனைத்து தீர்மானங்களையும் தமது வயது சிறுவர்களிடமிருந்து கிடைக்கும் கருத்துக்களுக்கு அமையவே தீர்மானங்களை எடுக்கின்றனர். இவ்வாறான காலப்பகுதியில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் இளவயதினர் பல்வேறு வகையான பாதுகாப்பற்ற விடயங்களுக்கு உள்ளாகின்றனர்.
கட்டுபாடுகளின்றி இவற்றைப் பயன்படுத்துவதால் சைபர் மிரட்டல்களுக்கு உள்ளாவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.