வட்டி வீதங்கள் குறைப்பு தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு
கொள்கை வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

கொள்கை வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இதனையடுத்து, நிலையான துணைநில் வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதங்களில் (SLFR) மாற்றம் ஏற்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (23) நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது அதன் கூட்டத்தில் துணைநில் வைப்பு வசதி வீதத்தினை (SDFR) 8.5% இலிருந்து 8.25% ஆகவும், துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினை (SLFR) 9.5% இலிருந்து 9.25% ஆகவும் 0.25% இனால் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, இதன் நன்மைகளை பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் சந்தை வட்டிவீதங்களை குறைப்பதற்கான உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நிதி நிறுவனங்களிடம் மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் மத்திய வங்கி விடுத்துள்ள அறிவித்தல்,
நடுத்தர காலத்தில் பணவீக்கத்தை 5 சதவீதம் கொண்ட இலக்கிடப்பட்ட மட்டத்தில் பேணுகின்ற அதேவேளை பொருளாதாரம் அதன் முழுமையான இயலளவினை அடைவதை இயலச்செய்யும் நோக்கில் உள்நாட்டு மற்றும் உலகளாவிய நிலைமைகள் தொடர்பிலான தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற பேரண்டப்பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் சாத்தியமான இடர்நேர்வுகள் மற்றும் நிச்சயமற்றதன்மைகள் என்பவற்றினைக் கவனமாக மதிப்பீடு செய்ததன் பின்னர் சபை இத்தீர்மானத்தை மேற்கொண்டது.
இத்தீர்மானத்தை மேற்கொள்கையில், சபையானது மிதமான பணவீக்கத் தோற்றப்பாடொன்றிற்கு மத்தியில் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலைப்பாட்டின் தொடர்ச்சியினைச் சமிக்ஞை செய்வதுடன் அதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு சந்தைக் கடன்வழங்கல் வீதங்களில் மேலுமொரு குறைப்பினைத் தூண்டுவதற்கான தேவையினைச் சபை கருத்திற்கொண்டது.
கிடைப்பனவாகவுள்ள தகவல்களின் அடிப்படையில், பணவீக்கமானது நடுத்தர காலத்தில் இலக்கிடப்பட்ட மட்டத்துடன் இசைந்து செல்வதற்கு முன்னர் அடுத்த ஒரு சில மாதங்களுக்கு 5 சதவீதம் கொண்ட பணவீக்க இலக்கிற்குக் கீழாக கணிசமானளவிலான இடைவெளியொன்றுடன் தொடர்ந்தும் காணப்படக்கூடுமென்பதனைச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.