முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு
சந்தேகநபர் தப்பியோடியுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு சாலைக் கடற்கரை பகுதியில் கடத்துவதற்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகள் நேற்று (17) மீட்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை இலங்கை கடற்படை மற்றும் விசேட அதிரடிப்படை ஆகியவற்றின் இணைந்த செயல்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு – சாலைக் கடற்கரை ஊடாக கஞ்சா கடத்தப்படவுள்ளதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ‘மஹேந்திரா கெப்’ ரக வாகனமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 140 கிலோ 460 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தின் போது சந்தேகநபர் தப்பியோடியுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகளும் குறித்த வாகனமும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.